சென்னை:
தமிழக சட்டமன்ற கூட்டம் வரும் 20ம் தேதி தொடங்குகிறது. இதில் வெள்ள பாதிப்புகள் குறித்து எதிர்கட்சிகள் புயலை கிளப்பும் என தெரிகிறது.
இந்த ஆண்டுக்கான தமிழக சட்டமன்ற பேரவையின் கூட்டம் வரும் 20-ம் தேதி காலை 10.30 மணிக்கு நடக்கிறது.
அன்று காலை 10.30 மணிக்கு கவர்னர் ரோசைய்யா உரை நிகழ்த்துகிறார். இந்த தகவல் எம்.எல்.ஏ.க்களுக்கு கடிதங்கள் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று தமிழக சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் கவர்னர் உரையில் முக்கிய அறிவிப்புகள் இடம் பெறும் என்று தெரிகிறது. கவர்னர் உரை மீதான விவாதம் சட்டசபையில் சில தினங்களில் முடியும். மிக குறுகிய கால கூட்டத் தொடராக இந்த கூட்ட தொடர் நடத்தி முடிக்கப்படும். இது தொடர்பான தகவல்கள் 20-ந்தேதி நடக்கும் அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார். அந்த கூட்டத் தொடரில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் கவர்னர் உரையில் பல அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. அதோடு, தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள், அதற்கு தமிழக அரசின் செயல்பாட்டில் குறை கூறிய எதிர்கட்சிகள், இக்கூட்டத்தில் புயலை கிளப்பும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.