சென்னை:

சென்னையில் டி.ஜி.பி. அலுவலகம் அருகே தீக்குளிக்க முயன்ற இரண்டு காவலர்கள்   கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேனி மாவட்ட ஆயுதப்படை பிரிவு காவலர்களாக பணியாற்றிய ரகு, கணேஷ் ஆகிய இருவர்  நேற்றுமுன்தினம் மாலை சென்னையில் டி.ஜி.பி. அலுவலகம் அருகே தலையில் மண்எண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சித்தனர்.

டி.ஜி.பி. அலுவலகத்தில் காவல் பணியில் இருந்த காவலர்கள் அவர்களை தீக்குளிக்கவிடாமல் காப்பாற்றினார்கள். தீக்குளிக்க முயன்ற போலீஸ்காரர்கள் இருவரும் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் மீதும், ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மீதும்  குற்றச்சாட்டுகளை கூறினார்கள்.

எந்தத் தவறும் செய்யாத தங்களை சாதி அடிப்படையில்  தேனி மாவட்டத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பணி இடமாற்றம் செய்தார்கள் என்றும் தெரிவித்தனர்.

அவர்கள் கூறிய குற்றச்சாட்டுகளை தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்  பாஸ்கரன் மறுத்தார். அவர்கள் இருவரும் பணியை சரிவர  செய்யாமல் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாகவும்,  உயர் அதிகாரிகளை மிரட்டியதாகவும், அதனால் அவர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.

இந்தநிலையில் தீக்குளிக்க முயன்ற காவலர்கள் ரகு, கணேஷ் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் இரவு மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு  ஆய்வாளர் அறையில் காவலில் வைக்கப்பட்டனர்.

கவுன்சிலிங் மூலம் அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது. அவர்கள் காவலில் வைக்கப்பட்ட அறைக்கு வெளியே துணை ஆணையர் சரவணன் தலைமையில் 20 காவலர்கள் காவல் காத்தனர்.

அவர்கள் இருவர் மீதும் சென்னை மெரினா காவல் நிலையத்தில், 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  பணியில் ஒழுங்கீனமாக நடத்தல், தடை செய்யப்பட்ட இடத்தில் அத்துமீறி போராட்டம் நடத்துதல்,  கூட்டு சதித்திட்டம் தீட்டுதல், கொலை மிரட்டல், தற்கொலை முயற்சி போன்ற சட்டப்பிரிவுகளில் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நேற்று மாலை அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று மெரினா காவல் நிலையத்தினர் தெரிவித்தனர். அவர்கள் இருவர் மீது பணி இடைநீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை வட்டாரம் தெரிவிக்கிறது.