பந்தள அரண்மனையை சேர்ந்த வாரிசுகள் இருவர் நாளை நடைபெறும் சபரிமலை மற்றும் மாளிகைப்புரம் மேல்சாந்திகளை தேர்வு செய்ய உள்ளனர்.

சபரிமலையில் ஒவ்வொரு வருடமும் மேல்சாந்தி தேர்வு நடைபெறுவது வழக்கம். ஒவ்வொரு வருடமும் தேர்வு செய்யப்படும் மேல்சாந்திகள் தலைமையில், அந்த ஆண்டின் மகரவிளக்கு கால பூஜைகள் மேற்கொள்ளப்படும். குலுக்கல் முறையில் கடந்த ஆண்டு சபரிமலை மேல்சாந்தியாக பெங்களூருவை சேர்ந்த வாசுதேவன் நம்பூதிரியும், மாளிகைப்புரம் மேல்சாந்தியாக நாராயணன் நம்பூதிரியும் தேர்வு செய்யப்பட்டனர்.

தற்போது 2019 – 2020ம் ஆண்டுக்கான மகர விளக்கு மற்றும் மண்டல கால பூஜைகளை முன்னின்று நடத்துவதற்காக புதிய மேல்சாந்திகள் நாளை தேர்வு செய்யப்பட உள்ளனர். இன்று மாலை 5.30 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை திறக்கப்பட உள்ளது. அதன் பின்னர் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, லட்சார்ச்சனை நடைபெற உள்ளது.

பின்னர், நாளை காலை மகா கனபதி ஹோமம் நடத்தப்பட்டு, புதிய மேல்சாந்தி தேர்வு நடைபெறும். புதிய மேல்சாந்தி பொறுப்புக்கு 18 பேர் விண்ணப்பத்துள்ள நிலையில், அவர்களை பந்தள அரண்மனை வாரிசுகளான மாதவ் கே. வர்மா மற்றும் காஞ்சனா வர்மா ஆகிய இரு சிறுவர்கள் தேர்வு செய்ய உள்ளனர். இதற்காக இன்று பிற்பகலில் இருமுடி கட்டி, பந்தள அரண்மனையில் இருந்து இருவரும் சபரிமலைக்கு புறப்பட்டுச் சென்றனர்.