டில்லி,

ஜிஎஸ்டியை எதிர்த்து இன்றும் நாளையும் நாடு முழுவதும் லாரிகள் இயக்கப்படமாட்டாது என்று அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள 327 சுங்கச்சாவடிகளை மூட வேண்டும், லாரிகளை நிறுத்தி அபராதம் வசூலிக்க கூடாது, டீசல் விலையை மாதத்திற்கு ஒரு முறையே நிர்ணயம் செய்ய வேண்டும், ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை லாரி உரிமையாளர்கள் அமைப்புகள் வலியுறுத்தின.

இதுதொடர்பாக ஏற்கனவே  மத்திய அமைச்சர்கள் அருண்ஜெட்லி, நிதின்கட்கரி ஆகியோரை சந்தித்து மனுவும் அளித்துள்ளனர். ஆனால், இதுகுறித்து  மத்திய அரசு எந்தவித  நடவடிக்கை எடுக்காததை கண்டித்து இன்றும், நாளையும் நாடு முழுவதும் லாரிகள் இயங்காது என்று அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக, நாடு முழுவதும் 93 லட்சம் லாரிகள் ஓடாது என்று தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நான்கரை லட்சம் லாரிகளும், 75 ஆயிரம் மணல் லாரி உரிமையாளர்களும் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றன.

இதனால், நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தக பாதிப்பு மற்றும் சரக்குகள் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.