சென்னை: தமிழ்நாட்டில் நவம்பர் 1ந்தேதி 1முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் பரவி வருகின்றன. ஏற்கனவே செப்டம்பர் 1ந்தேதி முதல் 9, 10, 11, 12 வகுப்புகளுக்கு 50% மாணவர்களுடன் பள்ளிகள் திறக்க தமிழகஅரசு உத்தரவிட்ட நிலையில், நவம்பர் முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த 16 மாதங்களாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டு உள்ளன. தற்போது கொரோனா தொற்றின் 2வது அலை கட்டுக்குள் இருப்பதால்,  செப்டம்பர் 1ந்தேதி முதல் 9, 10, 11, 12 வகுப்புகளுக்கு 50% மாணவர்களுடன் பள்ளிகள் திறக்க தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது. அதே வேளையில் ஆகஸ்டு இறுதி முதல் அக்டோபர் வரை கொரோனா 3வது அலை தாக்கக்கூடும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர். இதனால்,  மற்ற வகுப்பினருக்கு நவம்பர் மாதம் பள்ளிகள் திறக்க தமிழகஅரசு நடவடிக்கை எடுத்து வருகிறத.

மாணவர்கள் பள்ளிக்கு வரும் பட்சத்தில் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து  அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். வகுப்பறைகளில் மாணவர்கள் இருக்கைகள் இடைவெளி கூடியதாக அமைய வேண்டும், சமூக இடைவெளியுடன் மாணவர்கள் அமர்ந்து சாப்பிட வேண்டும்,  வகுப்புக்கு வரும்போது, மாணாக்கர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டும் என பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.