சென்னை: தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளிலும் 1ஜிபிபிஎஸ் வேகத்தில் அலைக்கற்றையை வழங்க இன்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
ஏற்கனவே கடந்த அதிமுக ஆட்சியில், கிராமங்களுக்கு இணையசேவை வழங்கும் பாரத்நெட் திட்டத்தின்படி, குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு டெண்டர் வழங்குவதற்கு சாதகமாக விதிமுறைகளை வளைத்ததாககுற்றம் சாட்டப்பட்டது. இதன் காரணமாக, 2000 கோடி மதிப்பிலான பாரத்நெட் டெண்டர் திட்டம் மத்தியஅரசால் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது, அந்த ஒப்பந்தம் மீண்டும் விடப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
ரூ.2000 கோடி பாரத்நெட் டெண்டர் ஊழல்: சட்டப்பஞ்சாயத்து குற்றச்சாட்டு
இதுகுறித்துத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில், தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET), தமிழ்நாட்டில் பாரத்நெட் திட்டத்தை செயல்படுத்தவுள்ள திட்ட ஒருங்கிணைப் பாளர்களான M/s. L&T (தொகுப்பு C), M/s. ITI (தொகுப்பு D) மற்றும் மூன்றாமவர் முகமையான M/s. BECIL ஆகிய நிறுவனங்களுடன், முதன்மை சேவை ஒப்பந்தங்களை (Master Services Agreement) இன்று (20.10.2021) கையெழுத்திட்டது.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர், “பாரத்நெட் திட்டம் என்பது, தமிழ்நாட்டில் உள்ள 12525 கிராம பஞ்சாயத்துகளையும் “கண்ணாடி இழைக் கம்பி வடம்” மூலம் இணைத்து, அதிவேக அலைக்கற்றை வழங்கும் திட்டமாகும். இத்திட்டத்தினை தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET) என்ற சிறப்பு நோக்கு நிறுவனம், ரூ.1815.32 கோடி செலவில் செயல்படுத்தும். இத்திட்டத்தின் மூலம் குறைந்தபட்சம் 1Gbps அளவிலான அலைக்கற்றை அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளிலும் வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.
இத்திட்டத்தினை செயல்படுத்தும் வகையில் மாவட்டங்கள் வாரியாக நான்கு தொகுப்புகள் (A, B, C & D) பிரிக்கப்பட்டு, தொகுப்புக்கு ஒருவர் என நான்கு திட்ட ஒருங்கிணைப்பாளர்களும், தணிக்கை மற்றும் ஆய்வு செய்ய மூன்றாமவர் முகமையும் (Third Party Agency -TPA) தெரிவு செய்யப்பட்டது.
தற்சமயம், தொகுப்பு C & D-இல் திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. தொகுப்பு C-ன் கீழ், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை நாமக்கல், கரூர், கோவை, திருப்பூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் 3326 கிராம பஞ்சாயத்துகளும், தொகுப்பு D-ன் கீழ், கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், தென்காசி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் 3103 கிராம பஞ்சாயத்துகளும், பாரத்நெட் திட்டத்தின் மூலம் இணைக்கப்பட்டு 1 Gbps அளவிலான அலைக்கற்றை சேவை வழங்கப்படும். தொகுப்பு A மற்றும் தொகுப்பு B-ல், நிலுவையில் உள்ள மேல் முறையீட்டு வழக்குகள் முடிவுக்கு வந்தபின்னர், தமிழக்தில் உள்ள அனைத்து 12,525 கிராமப்பஞ்சாயத்துகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
பாரத்நெட் திட்டத்தின் மூலம், அனைத்து கிராமப்புறங்களுக்கும், மலிவான மற்றும் தரமான “டிஜிட்டல்” சேவைகள், மின் கல்வி (e-Education), தொலை மருத்துவம் (Tele Medicine), இணையதள இணைப்பின் மூலம் மூன்று விதமான சேவைகள் (Triple Play) ஆகிய சேவைகளை வழங்க முடியும். மேலும், அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தொழில் நிறுவனங்கள், அதிவேக இணையதள சேவையினைப் பெற முடியும். இத்தகைய சேவைகளை வழங்குவதன் மூலம், ஊரக வேலைவாய்ப்பு மற்றும் அரசின் பல்வேறு திட்டங்கள் மக்களை விரைந்து சென்றடைய இத்திட்டம் வழி வகுக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
டெல்லி செங்கோட்டைவரை சந்தி சிரிக்கிறது – அதிமுக அரசின் பாரத்நெட் ஒப்பந்த ஊழல்! ஸ்டாலின்