சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், ரூ.7,375 கோடி மதிப்பிலான தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் 19ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிப்.10ந்தேதி அன்று மாநில கேபினட் கூட்டம் நடைபெற்றது. 2025-26 நிதியண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை முன்னிட்டு இந்த அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

அதன்படி, 4 மாவட்டங்களில், பெல்ட் ஏரியா பகுதிகளில் இருக்கக்கூடிய 32 கிலோ மீட்டரில் குடியிருப்பவர்கள் ஆக்கிரமிப்பு செய்து நீண்ட நெடுங்காலமாக குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி,  29 ஆயிரத்து 187 பேருக்கு பட்டா வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

மேலும்,   இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ரூ.7,375 கோடி மதிப்பிலான தொழில் முதலீடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் சுமார் 19 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.

உலகளாவிய திறன் மையங்கள், லெதர் அல்லாத காலணி, உணவு பதப்படுத்தப்படுதல் உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வேலூர், தூத்துக்குடி, திருச்சி, பெரம்லூர் மாவட்டங்களில் அமையவுள்ள தொழிற்சாலைகளின் முதலீடுகளுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.