சென்னை: தமிழ்நாட்டில் தலைமை காவலர்கள், முதல்நிலை காவலர்கள் உட்பட 1,847 பேரை இடமாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

நடப்பாண்டு நாடாளுமன்ற  தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறுவதையொட்டி, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும், அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரை இடமாற்றம் செய்ய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டதாக தகவல் வெளியானது

அதன்படி, 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றி வரும் அரசு அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.  இந்த நிலையில்,  தேர்தல் நடத்தை விதிகளின் படி தமிழகத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றி வந்த காவலர்களை இடமாற்றம் செய்ய டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டு உள்ளார்.

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 1847 காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தலைமை காவலர்கள், முதல்நிலை காவலர்கள், இரண்டாம் நிலை காவலர்கள், பெண் காவலர்கள் என மொத்தம் 1847 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் சென்னை காவல்துறையில் மட்டும் 340 காவலர்கள், பிற மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பணியிடம் மாற்றம் தொடர்பான பட்டியலை வரும் 10ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் எனவும் தமிழ்நாடு டிஜிபி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலையொட்டி தலைமை தேர்தல் ஆணையமும், காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றி வந்த காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.