சென்னை: துணை முதல்வர் பதவி டம்மியானது என ஓபிஎஸ் திடீர் என விமர்சித்து  உள்ளார். ஆட்சி காலத்தில் துணை முதல்வராக இருந்த பதவி சுகங்களை அனுபவித்துவிட்டு, தற்போது துணைமுதல்வர் பதவி டம்மி என விமர்சனம் செய்து இருப்பது அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்போதைய திமுக ஆட்சியில், முதலமைச்சர் ஸ்டாலின் மகனான அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை முன்னிலைப்படுத்தி வரும் ஸ்டாலின், அவரை விரைவில்  துணைமுதல்வராக்க  முயற்சித்து வருவதாக செய்திகள் பரவி வரும் நிலையில்,  ஓபிஎஸ்-ன் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடாளுமன்ற ஆட்சி அமைப்பில், அமைச்சரவையில் முதலமைச்சர் “சமமானவர்களில் முதன்மையானவராக” கருதப்படுகிறார்; துணை முதல்வர் பதவி என்பது கூட்டணி ஆட்சிக்குள் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் பலத்தை ஏற்படுத்த பயன்படுகிறது. தற்போதை நிலையில் சுமார் 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் துணை முதல்வர்கள் உள்ளனர். ஆனால், அவர்களால் தன்னிச்சையாக எந்தவொரு செயலும் செய்ய முடிவது இல்லை. ஆட்சியையும், எதிர்ப்பையும் தக்க வைத்துக்கொள்ளவே பொதுவாக துணை முதல்வர் பதவிகள் வழங்கப்படுகின்றன.

இந்த நிலையில், கடந்த அதிமுக ஆட்சியின்போது, துணைமுதல்வராக இருந்த, ஓபிஎஸ், துணைமுதல்வர் பதவி டம்மி என தெரிவித்துள்ளார்.  அன்று (எடப்பாடி ஆட்சி) நான்  ஆதரவு அளித்ததால் தான் அந்த ஆட்சி காப்பாற்றப்பட்டது. அன்று நான் எதிர்த்து வாக்களித்து இருந்தால், ஆட்சியும் இல்லை, முதலமைச்சரும் இல்லை என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

அதிமுகவில் இருந்த ஓபிஎஸ்-க்கும் எடப்பாடிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், ஓபிஎஸ் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதையடுத்து, அவர்  பாஜகவுடன் நெருக்கம் காட்டி வருகிறார்.  சமீபத்தில் திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்த பிரதமர் மோடியை ஓபிஎஸ் சந்தித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி தொடர்பான ரகசியங்களை பொதுவெளியில் இப்போது சொல்ல முடியாது. காலம் வரும் போது அதை வெளியிடுவேன். உச்சநீதிமன்றத்தில் எங்களுக்கு நிச்சயம் நியாயம் கிடைக்கும் என நம்புகிறேன் என்றவர், அதிமுகவை மீட்டெடுப்பதற்கான போராட்டம் தொடரும் என்று  கூறி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  தற்போது,  அன்று  நான் ஆதரவு அளித்ததால் தான் அந்த ஆட்சி (எடப்பாடி ஆட்சி)  அன்றைக்கு காப்பாற்றப்பட்டது என்றவர், ஆட்சிக்கு ஒரு சோதனை வருகிறபோது அவர்களுக்கு ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவு  தேவையானது. ஓ பன்னீர் செல்வம் அன்று ஆதரவு அளித்ததால் தான் அந்த ஆட்சி அன்றைக்கு 5 ஓட்டுகளில் காப்பாற்றப்பட்டது. அன்று நான் எதிர்த்து வாக்களித்து இருந்தால், ஆட்சியும் இல்லை, முதலமைச்சரும் இல்லை. கட்சியே கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டு இருக்கும்.

ஆனால், இன்று அவர்களுக்கு  துளி அளவு கூட நன்றி இல்லை. அவர் சொல்கிறார்.. ஓ பன்னீர் செல்வத்துக்கு நான் தான் முதலமைச்சர் பதவி கொடுத்தேன் என்று கூறுகிறார். ஜெயலலிதா எனக்கு தான் முதல்வர் பதவியை கொடுத்தார். கழகத்தில் எத்தனையோ மூத்த தலைவர்கள், கழகத்திற்காக அரும்பாடு பட்டவர்கள் என நிறைய பேர் இந்தார்கள். அப்போது ஜெயலலிதா எனக்கு தான் முதல்வர் பதவியை கொடுத்தார் என்று கூறிய ஓபிஎஸ், . ஆனால் இவர் என்னவோ துணை முதல்வர் பதவியை தந்தாராம் என அங்கலாய்த்ததுடன்,  துணை முதல்வர் பதவி அதிகாரம் இல்லா பதவி.. டம்மி பதவி என்பதை உணர்ந்து தான் அந்த பதவி எனக்கு வேண்டாம் என்று கூறினேன்.  ஆனால்,  என்னை வலுக்கட்டாயமாக தான் அந்த பதவியில் இருக்க வைத்தார்கள். அந்த தேதியில் இருந்தே என்னை எப்பாற்பட்டாவது கழகத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று தான் எடப்பாடி நினைத்துக்கொண்டு இருந்தார் என்றவர், ஜெயலலிதா எப்போது மரணமடைவார்.. நாம் எப்போது முதல்வராக முடியும் என்று காத்துக்கொண்டு இருந்து தான் .. ஜெயலலிதா இறந்த பின்னர் அந்த வேலையை செய்ய ஆரம்பித்துள்ளனர்.

நான் என்ன தவறு செய்தேன் என்று தான் எடப்பாடியிடம் கேள்வி கேட்கிறேன். ஒருமுறை பேட்டி கொடுக்கும் போது என்னை திமுகவுக்கு சென்றுவிட்டேன் என்று சொல்கிறார். எவ்வளவு திமிர் உங்களுக்கு. இயக்கத்துக்காக எவ்வளவு அரும்பாடு பட்டிருக்கிறேன். இயக்குத்துக்கு இடையூறு வரும் போது காப்பாற்றியிருக்கிறேன். யாருக்கும் நம்பிக்கை துரோகம் செய்யாதவன். இது எல்லாம் மக்களுக்கு தெரியும்.

அதேபோல் நீங்க எவ்வளவு நம்பிக்கை துரோகம் செய்தீர்கள் என்றும் மக்களுக்கு தெரியும். சசிகலா தான் உங்களை முதல்வராக்கினார்.. ஆனால் 3 மாதம் கழித்து நீங்களே சசிகலாவை வசைபாடினீங்க முதல்வராக்கிய சசிகலாவுக்கு மட்டுமல்ல பிரதமர் மோடிக்கும் துரோகம் செய்தவர்தான் இபிஎஸ் என்று காட்டமாக குற்றஞ்சாட்டினார். என்று ஓபிஎஸ் கொந்தளித்தார்.

ஓபிஎஸ் எடப்பாடியை குறிப்பிட்டு பேசியிருந்தாலும், தற்போதைய அரசியல் சூழலில் அவரது பேச்சு உதயநிதியை மேற்கோள் காட்டி விமர்சிக்கப்பட்டு வருகிறது.

அரசியலுக்கு வரமாட்டேன், பதவி பெற மாட்டேன் என்று கூறிய உதயநிதிதான் தற்போது விளையாட்டுத்துறை அமைச்சராக உள்ளதுடன், பல்வேறு நிகழ்வுகளில் அவரை கட்சி நிர்வாகிகளும், முதலமைச்சர் ஸ்டாலினும் முன்னிலைப்படுத்தி வருகின்றனர். அவரது கட்சியினரே உதயநிதிக்கு துணைமுதல்வர் பதவி வழங்க வேண்டும் என தீர்மானம் இயற்றி வருகின்றனர்.

உதயநிதியின் கடந்த பிறந்தநாள் நிகழ்ச்சியின்போது, செய்தியாளர் ஒருவர்  அமைச்சரானபிறகு வரும் முதல் பிறந்தநாளை எப்படி பார்க்கிறீர்கள் என்று கேட்டதற்கு பதில் அளித்த உதயநிதி, ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் அண்ணன் சேகர்பாபு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். நான் திருப்திகரமாக எனது பணிகளை செய்து வருகிறேன் என்றும் உதயநிதி தெரிவித்தார்.

பிறந்தநாளுக்கு என்ன செய்தி சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு ஒரு செய்தியும் இல்லை. நீங்க வாழ்த்து சொன்னீர்கள் நான் நன்றி கூறுகிறேன் என்று சொன்னார் உதயநிதி.

தொடர்ந்து விடாமல் செய்தியாளர்கள் சிலர் தொண்டர்களின் கோரிக்கையான துணை முதல்வர் பதவி என்று கேட்கவே.. ஏங்க அது உங்க கோரிக்கைங்க என்று சொல்லி சிரித்து விட்டு சென்றார் உதயநிதி. உதயநிதியின் சிரிப்பு குறித்து அப்போது பல் செய்திகள் கிசுகிசுக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து  நடைபெற்று வரும் பல்வேறு நிகழ்வுகள், மழை வெள்ள நிவாரணம், புத்த காட்சி திறப்பு விழா உள்பட பிரதமரை சந்தித்திப்பது என  பல்வேறு நிகழ்வுகளுக்கு உதயநிதியை முதலமைச்சர் முன்னிறுத்தி வருகிறார். இதனால், உதயநிதி விரைவில் துணைமுதல்வராக ஆக்கப்படலாம் என கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூழலில்தான் ஓபிஎஸ் துணைமுதல்வர் பதவி டம்பி என விமர்சனம் செய்துள்ளரது  சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.