திருவள்ளூர்: சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் கடந்த 10 மாதங்களில் 18 பேர் மரணம் அடைந்துள்ளதால், காவல்நகைளை வளர்ப்போருக்கு  காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையின் புறநகர் பகுதிகள், அண்டை மாவட்டங்களான செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் சாலைகளில் ஆங்காங்கே மாடுகள் நடமாட்டம் இருப்பதை நான் பார்த்திருப்போம். இந்த கால்நடைகள் சாலையோர நடைமேடையிலும், சாலையின் நடுவேயும் படுத்து ஓய்வெடுப்பதுடன், ஆங்காங்கே சாணமிட்டுச் செல்வதால் நடைமேடைகளில் யாரும் அமர முடியாத நிலையும் ஏற்படுகிறது. மாடு வளர்ப்போர் காலையில் மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு, மாலையில் மீண்டும் கொண்டுவந்து கட்டிப்போடுவதற்கு முன் வருவதில்லை.

இந்த மாடுகள் நெடுஞ்சாலைகளுக்கும் சென்று ஹாயாக உலா வருவதால் ஏராளமான விபத்துக்களும், பல கால்நடைகள் உயிரிழந்து வருவதுடன் அப்பாவி வாகன ஓட்டிகளும் பலியாகி வருகின்றனர். இது தொடர்பாக கால்நடை வளர்ப்போரிடைய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதையும் மீறி கால்நடைகளை சாலைகளில் சுற்றித்திரிய விடுவோருக்கு  அதிக அபராதம் விதிக்க வேண்டும். அப்போதுதான் சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிவதைக் கட்டுப்படுத்த முடியும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால், கால்நடைகள் வளர்ப்போருக்கு பல முறை அந்தந்த பகுதி காவல்துறையினர் கடும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இருந்தாலும், மாடு வளர்ப்போர் அதை கண்டுகொள்வது இல்லை.

இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்ட காவல்துறை, மாடு வளர்ப்போருக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் கடந்த 10 மாதங்களில் 18 பேர் மரணம்  அடைந்துள்ளதாகவும், இதனால் கால்நடைகளை பொதுவெளியில் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்  என திருவள்ளூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.