சென்னை: தி.மு.க. கூட்டணியில் தோழமை கட்சிகளுடன் உடன்பாடு, தொகுதி ஒதுக்கீடுகள் முடிவடைந்துள்ளதால், இன்று மாலை திமுக  வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நாளை வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ளதால், இன்று மாலை வேட்பாளர் பட்டியலை வெளியிட திமுக தலைமை தயாராகி வருகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ந்தேதி நடைபெற உள்ளது.  நாளை (மார்ச் 12ந்தேதி) முதல் வேட்பு மனுத்தாக்கல் தொடங்குகிறது. இதையொட்டி, அரசியல் கட்சிகளிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக உள்பட பெரும்பாலான கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள், வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளன.

திமுக கூட்டணியில் இணைந்துள்ள, காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, பார்வர்டு பிளாக், தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலை கட்சி, ஆதித்தமிழர் பேரவை ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, சில கட்சிகள் வேட்பாளர்களையும் அறிவித்து உள்ளன.

திமுககூட்டணியில் மொத்தம்  12 கட்சிகளை இணைந்துள்ளன. அதில்,  திமுக – 173, காங்கிரஸ் – 25, சி.பி.எம் – 6, சிபிஐ – 6, விசிக – 6, மதிமுக – 6, ஐ.யூ.எம்.எல் – 3, கொ.ம.தே.க – 3, மமக – 2, த.வா.க – 1, ஆ.த.பேரவை – 1, ம.வி.க – 1 என தொகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளது.  தனிப்பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவையான நிலையில் திமுக அதனை விட கூடுதலாக 56 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

இதையடுத்து, இன்று திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.  ‘கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்குவது நிறைவுபெற்றுவிட்டதால், இன்று  திமுக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் விவரம்  வெளியிடப்படும் என திமுக மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

திமுக தனியாக 173 தொகுதிகளிலும், கூட்டணி கட்சிகளுடன் இணைந்து 187 இடங்களில் உதயசூரியன் சின்னத்தில் களமிறங்குகிறது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி இன்று  தி.மு.க. தேர்தல் அறிக்கை இன்று வெளியாவதாக இருந்தது. ஆனால் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிட உள்ளதால் தேர்தல் அறிக்கை நாளை (வெள்ளிக்கிழமை) வெளியாகும் என அறிவாலயம் வட்டார தகவல்கள் உறுதி செய்கின்றன.