காந்திநகர்:

குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது 17 ஊழல்கள் நடந்துள்ளது என்று காங்கிரஸ் பட்டியலிட்டுள்ளது. இது குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஊழல் குறித்து விசாரிக்க லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் லோக்ஆயுக்தா விசாரணைக்கு மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஓய்வுபெற்ற நீதிபதி எம்.பி.ஷா தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இந்த ஊழல் பட்டியலை ஜனாதிபதி, குஜராத் கவர்னர் ஆகியோரிடம் வழங்கி விசாரணை நடத்த காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

17 ஊழல்கள் அடங்கிய பட்டியல் விபரம்:

# டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு நானோ நிலையம் அமைக்க குறைந்த விலையில் 1,100 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

# அதானி குழுமத்துக்கு முந்த்ரா துறைமுகம் மற்றும் முந்த்ரா சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க மலிவு விலையில் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

# ரியல் எஸ்டேட் அதிபர் கே.ராஹேஜேவுக்கு ஒரு சதுர மீட்டர் நிலம் ரூ.470 என்ற அடிப்படையில் 3.76 லட்சம் சதுர மீட்டர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. இதே நிலத்துக்கு தென் மேற்கு விமானப் படை கமாண்டன்டிடம் ஒரு சதுர மீட்டர் ரூ.1,100 என்ற அடிப்படையில் கோரப்பட்டது.

# சத்ரலா இந்தியன் ஓட்டல் குழுமத்துக்கு ஓட்டல் அமைக்க நவ்சாரி வேளாண் பல்கலைக்கழகத்துக்கு சொந்தமான 65 ஆயிரம் சதுர மீட்டர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

# பாகிஸ்தான் எல்லை அருகே வெங்கைய நாயுடுவுக்கு நெருக்கமான உப்பு ரசாயன நிறுவனங்கள் அமைக்க அதிகளவில் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

# தடை செய்யப்பட்ட வன நிலப்பரப்பில் 2.08 லட்சம் சதுர மீட்டர் நிலத்தை எஸ்ஆர் ஸ்டீல் நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

# அகமதாபாத்தில் சர்கேஜ்-காந்திநகர் நெடுஞ்சாலையில் பாரத் ஓட்டல் நிறுவனத்துக்கு 25,724 சதுர மீட்டர் நிலம் ஏலம் இல்லாமல் வழங்கப்பட்டுள்ளது.

# 2008ம் ஆண்டில் 38 ஏரிகளில் மீன் பிடிக்கும் உரிமையை எவ்வித டெண்டரும் இன்றி ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

# எல் அண்டு டி நிறுவனத்திறகு ஒரு சதுர மீட்டர் ரூ.1 என்ற அடிப்படையில் 80 ஹெக்டேர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

# முக்கிய நகரங்களில் உள்ள அரசு நிலம் எவ்வித ஏலமும் விடப்படாமல் தனியார் தொழிற்சாலை மற்றும் தொழிலபதிர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

# கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட ஒரு நிறுவனத்திடம் இருந்து கால்நடை தீவனம் 5 கிலோ ரூ.240 என்ற அடிப்படையில் வாங்கப்பட்டுள்ளது. இதர நிறுவனங்களில் 5 கிலோ ரூ.120 முதல் 140க்கு கிடைக்கிறது.

# அங்கன்வாடி மையங்களுக்கு ஊட்டச்சத்து உணவு பொருட்கள் முறைகேடாக கொள்முதல் செய்யப்பட்டதில் ரூ. 92 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

# குஜராத் மாநில பெட்ரோலிய நிறுவனம்  (ஜிஎஸ்பிசி) ரூ.4,933.50 கோடியை முதலீடு செய்து மாநிலத்தில் உள்ள 51 வட்டாரங்களில் 13 வட்டாரங்களில் மட்டும் ரூ. 250 கோடி மட்டுமே வருவாய் ஈட்டியுள்ளது.

# முதல்வராக இருந்த நரேந்திர மோடி 5 ஆண்டுகளில் அரசு, வணிக விமானம் மற்றும் ஹெலிகாப்டர்களை பயன்படுத்தாமல் 200 முறை தனியார் விமானம், ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்கு அதிகளவில் அரசுப் பணம் செலவு செய்யப்பட்டுள்ளது.

# 2003 முதல் 2005ம் ஆண்டு வரை நடந்த எஸ்எஸ்ஓய் என்ற உபரி நீரை திருப்பி விடும் திட்டத்தில் ரூ. 500 கோடி ஊழல் நடந்துள்ளது.

# இந்தியா கோல்ட் ரிபைனரி நிறுவன விதிகளுக்கு புறம்பாக 36.25 ஏக்கர் பண்ணை நிலம் கட்ச் மாவட்டத்தில் வாங்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

# ஜிஎஸ்பிசி மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம் எவ்வித டெண்டரும் கோரப்படாமல் ஸ்வான் எனர்ஜி நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.