சென்னை

மிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி 16678 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்திருந்தது.  இன்று போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அவர், ‘’பொங்கலையொட்டி ஜனவரி 11ஆம் தேதிமுதல் 13ஆம் தேதிவரை சென்னையிலிருந்து மொத்தம் 10,300 பேருந்துகள் இயக்கப்படும். அந்த மூன்று நாட்களிலும் சென்னையிலிருந்து ஒரு நாளைக்கு 4000 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

இந்த பேருந்துகள் சென்னையில் கோயம்பேடு, மாதவரம், தாம்பரம், பூந்தமல்லி, கே.கே.நகர் பேருந்து நிலையங்களிலிருந்து இயக்கப்படும். மேலும் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மற்ற 4 பேருந்து நிலையங்களுக்குச் செல்ல இணைப்பு பேருந்துகளும் இயக்கப்படும்.

ஜனவரி 11 முதல் 13 வரை சென்னை தவிரப் பிற ஊர்களில் இருந்து 6,468 பேருந்துகள் இயக்கப்படும்.  பொங்கல் முடிந்து சொந்த ஊர் திரும்ப ஏதுவாக மொத்தம் 16,709 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.