சென்னை:
சொத்துக்குவிப்பு வழக்கில் 4ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவின் ரூ.ஆயிரத்து 600 கோடி மதிப்பிலான பினாமி சொத்துக்களை வருமானவரித்துறை அதிரடியாக முடக்கி உள்ளது. இது சசிகலா குடும்பத்தாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு நவம்பரில் வருமான வரித்துறை சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். ஒரே நேரத்தில் தமிழகம் புதுச்சேரி மற்றும் சென்னை, திருவாரூர், மன்னார்குடி, தஞ்சை, புதுக்கோட்டை, கோடநாடு, புதுச்சேரி ஆரோவில் உள்பட சுமார் 187 இடங்களில் 1200 அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். 5 நாட்கள் நடைபெற்ற இந்த சோதனை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, கோடிக்கணக்கான பணங்களை மாற்றியதும், அதற்கு ஈடாக சொத்துக்களை பினாமி பெயரில் வாங்கிக் குவித்ததும், ஜெயலலிதா வீட்டில் நடைபெற்ற வருமான வரிச்சோதனையின்போது தெரிய வந்தது. இந்த சோதனையின்போது, ரூ. 1600 கோடி மதிப்பிலான சொத்துகள் முறைகேடாக வாங்கி குவித்திருப்பதும், வரி ஏய்ப்பு செய்திருப்பதற்கான ஆவனங்கள் கைப்பற்றப்பட்டது.
முறைகேடாக சம்பாதித்த பணத்தின் மூலம் சென்னையில் உள்ள, ஜாஸ் சினிமாஸ், பெரம்பூரில் உள்ள ஸ்பெக்ட்ரம் மால், சென்னையில் உள்ள கங்கா பவுண்டேசன், கோயம்பத்தூர் செந்தில் பேப்பர் நிறுவனம், பாண்டிச்சேரி ஸ்ரீ லட்சுமி ஜூவல்லரிக்கு சொந்தமான ரிசார்ட் உள்பட 10 பெரிய நிறுவனங்களை பினாமியாக சசிகலா வாங்கி குவித்துள்ளது தெரியவந்தது. இது தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பினாமி நிறுவனங்கள் இயங்கி வரும் அந்தந்த சார்பதிவாளர்களுக்கும், நிறுவனங்களின் பதிவாளர்களுக்கும் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. அதன் விளக்கங்களைத் தொடர்ந்ருது, சசிகலாவுக்கு சொந்தமான ரூ.1600 கோடி மதிப்பிலான சொத்துகளை பினாமி திருத்த சட்டம் 20017ன்கீழ் அனைத்தையும் அதிகாரிகள் அதிரடியாக நீதிமன்றம் மூலம் முடக்கியுள்ளனர்.
இந்த தகவல் வருமானவரித்துறை வட்டாரத்திலும் தமிழகத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது சசிகலா குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.