பெட்ரோலிய பொருட்களின் விலையுயர்வைக் கண்டித்து கஜகஸ்தான் நாட்டில் கடந்த வாரம் நடைபெற்ற பேரணி வன்முறையில் முடிந்தது.

ஜனாதிபதி மாளிகை மற்றும் அரசு அலுவலகங்கள் மற்றும் கட்டிடங்களை முற்றுகையிட்ட தீவிரவாதிகள் பல்வேறு இடங்களில் தீவைப்பு மற்றும் துப்பாக்கிசூடு உள்ளிட்ட வன்முறையில் இறங்கினர்.

கடைகள் சூறையாடப்பட்டதோடு சாலையில் ஆயுதம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கலவரக்காரர்களை கட்டுப்படுத்த அவசர நிலை பிரகடனப்
படுத்தப்பட்டதோடு ரஷ்ய கூட்டு காவல் படையினரின் உதவியும் நாடப்பட்டது.

அல்மட்டி நகரில் நடைபெற்ற துப்பாக்கி சூடு மற்றும் வன்முறை சம்பவங்களில் மட்டும் 103 க்கும் அதிகமானோர் இறந்ததாக கூறப்படுகிறது. நாடு முழுவதும் மொத்தம் 164 பேர் பலியானதாக கூறப்படுகிறது.

இருப்பினும் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. வன்முறை தொடர்பாக இதுவரை 5000 க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று முதல் வன்முறை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வன்முறையைத் தொடர்ந்து அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து இந்திய வெளியுறவுத் துறை இதுவரை எந்த தகவலும் வெளியிடாத நிலையில். மருத்துவம் உள்ளிட்ட மேற்படிப்புகளுக்காக அங்கு சென்றுள்ள இந்திய மாணவர்கள் நலன் குறித்து அச்சம் நிலவி வருகிறது.

இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளதோடு, ஏ.டி.எம். உள்ளிட்ட சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை பெருமளவு உயர்ந்துள்ளதோடு, தட்டுப்பாடும் நிலவி வருவதாகக் கூறப்படுகிறது.