சென்னை: பாட்டாளி மக்கள் கட்சி இன்று தனது 15வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாடு அரசுக்கு  296 யோசனைகளை தெரிவித்துள்ளது.

டாக்டர் ராமதாஸ் தலைமையிலான பாமக, விவசாயிகளுக்கென தனி பட்ஜெட் போட வேண்டும் என பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக ஆண்டு தோறும் நிழல் பட்ஜெட்டையும் தாக்கல் செய்து வருகிறது. இந்த நிலையில், ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு கடந்த ஆண்டு (2021) பதவி ஏற்றதும், தமிழக வரலாற்றில் முதன்முறையாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.  இந்த ஆண்டும் 2வதுமுறையாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இநத் நிலையில்,  பாட்டாளி மக்கள் கட்சியின் 15ஆவது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை  இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிதிநிலை அறிக்கையானது சிறப்பு கவனத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள  அன்புமணி ராமதாஸ், வேளாண்துறை வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்துவதற்கு வசதியாக மொத்தம் 82 தலைப்புகளில் 296 யோசனைகளை தமிழக அரசுக்கு தெரிவித்திருக்கிறோம் என்றும்  இவற்றை பா.ம.க.வின் திட்டங்களாக கருதாமல், வேளாண் பெருமக்களின் கோரிக்கையாக கருதி  இவற்றில் அரசுக்கு சாத்தியமானவற்றை மார்ச் மாதத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள தமிழகஅரசின் இரண்டாவது வேளாண் நிதிநிலை அறிக்கையில் சேர்க்க வேண்டும்; நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் பா.ம.க.வின் விருப்பமும் வேண்டுகோளும் என்று தெரிவித்துள்ளார்.