சென்னை:

மிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் முடி வடைந்தது. 39 தொகுதிகளுக்கும் சேர்த்து 1587 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், அதில்  932 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாக   தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 18ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவுடன்,  18 சட்டமன்ற இடைத் தேர்தல் வாக்குப்பதிவும் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 18ந்தேதி தொடங்கி நேற்றுடன் கடந்த 26ந்தேதி முடிவடைந்தது. நேற்று (27ந்தேதி) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது.

இந்த தேர்தலில் முக்கிய கட்சிகளாக திமுக, அதிமுக கூட்டணி தவிர, மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், நாம் தமிழர் கட்சி என அனைத்து கட்சிகளும் தனித்தனியாக களமிறங்கி உள்ளதால்,  5 முனை போட்டி நிலவி வருகிறது.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ, தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் 1587 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதாகவும், இதில் 932 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது, பல்வேறு காரணங்களால் 655 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளது என்று கூறினார்.

அதுபோல  18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு தாக்கலான  மொத்த வேட்புமனுக்கள் 513 என்றும், இதில் 305 மனுக்கள் ஏற்கப்பட்டு, 213 மனுக்கள்  நிராகரிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

தேர்தல் நடத்தை விதிகள் மீறியதாக ஏராளமான புகார்கள் குவிந்துள்ளதாகவும்,  திமுக மீது அதிகபட்சமாக 10 தேர்தல் வழக்குகளும், அதிமுக மீது 9 தேர்தல் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக  தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் இதுவரை சுமார் 50 கோடி ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தவர்,  69 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி பொருட்கள் சிக்கியுள்ளது என்றும் கூறினார்.

டிடிவி தினகரனின்  அ.ம.மு.க.வுக்கு பொது சின்னம் வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறுதான் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது என்றும்  விளக்கம் அளித்தவர், இந்த விவகாரத்தில்  தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும்  என்று கூறினார்.