டெல்லி: மகாத்மா காந்தியின் 153-வது பிறந்தநாளையொட்டி, தலைநகர் டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத், பிரதமர் மோடி, சோனியா, ராகுல் உள்பட தலைவர்கள் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, முன்னாள் பிரதமர் மறைந்த லால்பகதூர் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினர்.

தேசப்பிதா மாகாத்மா காந்தியின் 153-வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அவரது உருவ சிலைகளுக்கு அரசியல் கட்சியினர், சுதந்திர போராட்ட தியாகிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் மரியாதை செய்து வருகின்றனர்.

டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில்ட, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு,  பாராளுமன்ற சபாநாயகர் ஓம்.பிர்லா, பிரதமர் மோடி உள்பட மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்தி, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட அரசியல் கட்சித் த தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட் பதிவில், “ஏராளமான மக்களுக்கு வலிமை தரும் காந்தியின் உன்னத கோட்பாடுகள் உலக அளவில் பொருத்தமானவை” எனப்பதிவிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து மறைந்த முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியிலும் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

Photos Credit: ANI