k.veeramani
திருச்சி சிறுகனூர் பெரியா உலகம் திடலில் 19.3.2016ல் நடைபெற்ற திராவிடர் கழக மாநில மாநாட்டில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் இது ஒன்றாவது தீர்மானம்.
’’தமிழ்நாட்டில் நடக்க இருக்கும் 15 ஆம் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளப் பெருமக்கள் ஆற்றவேண்டிய கடமை குறித்து வழிகாட்டவேண்டிய பொறுப்பு – அரசியலுக்கு அப்பாற்பட்ட சமுதாயப் புரட்சி இயக்கமான திராவிடர் கழகத்தின் முக்கிய பொறுப்பாகும்.
தமிழ்நாட்டில் கடந்த அய்ந்தாண்டு காலமாக ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் அ.இ.அ.தி.மு.க. ஆட்சியானது அனைத்து வகைகளிலும் தோல்வி கண்ட ஒரு ஆட்சியாகும்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அக்கட்சியால் வெளியிடப்பட்ட, தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டவற்றை செயல்படுத்தாமல், ‘வெறும் அறிவிப்பு அரசாகவே’ கடந்த அய்ந்தாண்டு காலமாக நடந்து கொண்டிருக்கிறது. வளர்ச்சித் திட்டங்களோ, ‘எங்கள் ஆட்சியில் இதோ மகத்தான சாதனை!’ என்று சொல்லவோ குறிப்பிடத்தக்க வகையில் எந்த சாதனையையும் நிகழ்த்தாத ஆட்சியாகும்.
புதிய தொழிற்சாலைகளையோ, வேலை வாய்ப்பையோ ஏற்படுத்தாததோடு மட்டுமல்லாமல் – அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு – தி.மு.க. ஆட்சியில் அமர்த்தப்பட்டார்கள் என்பதற்காக 13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களை வேலையை விட்டு நீக்கியது, சட்ட விரோதமும், நியாய விரோதமும், மனிதநேயத்துக்கு அப்பாற்பட்டதுமான அழி பழி செயலாகும். அ.இ.அ.தி.மு.க. ஆட்சியின் இந்த அநீதியான செயலால் மக்கள் நலப் பணியாளர்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்துகொண்டதும், அதிர்ச்சிக்கு ஆளாகிய சிலர் மரணத்தைத் தழுவியதும் என்றென்றும் கழுவப்பட முடியாத கறை படிந்த செயல் என்பதில் எள்ளளவும் அய்யமில்லை.
சட்டமன்றத்தை நடத்துவதற்காகவென்றே அதற்கான கட்டமைப்போடு உருவாக்கப்பட்ட 1200 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட கட்டடத்தை – அந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தாமல், தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்டது என்ற ஒரே காரணத்துக்காக அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு, அந்தக் கட்டட கட்டமைப்புக்குச் சற்றும் பொருத்தம் இல்லாத வகையில் சிறப்புப் பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றியது ;
அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டையட்டி அவர்தம் நினைவை மிகப் பொருத்தமாகப் போற்றும் வகையில் 172 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட அண்ணா – நூற்றாண்டு நினைவு நூலகத்தை, அந்த இடத்திலிருந்து மாற்ற முயற்சித்ததும், நீதிமன்ற தலையீட்டால், இட மாற்றம் செய்ய முடியாத அதே நேரத்தில் – அந்த நூலகத்தினைச் சிதைக்கும் வகையிலும், வளர்ச்சியை முடக்கும் வகையில் சென்னை உயர்நீதிமன்றம் தலையிடவேண்டிய நிலையில் அ.இ.அ.தி.மு.க. அரசு நடந்துகொண்டது ;
போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்கும் வகையிலும், சென்னைத் துறைமுகத்தின் வளர்ச்சியை மேம்படுத்தும் தன்மையிலும் 1816 கோடி ரூபாய் செலவில் சென்னைத் துறைமுகம் முதல் மதுரவாயல் வரை உருவாக்கப்பட இருந்த பறக்கும் பாலத் திட்டத்தை முடக்கியது மூலமாக, அ.இ.அ.தி.மு.க. ஆட்சி என்பது ‘‘மக்கள் நல அரசு’’ என்ற ஓர் அரசின் இலக்கணத்துக்கு முற்றிலும் எதிரானது என்பதைத் தனக்குத்தானே நிரூபித்துக் கொண்டுவிட்டது.
சட்டமன்ற நடவடிக்கைகளும், ஒரு ஜனநாயக நாட்டின் பெருமைக்கு உகந்ததாக இல்லை என்பதும் சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும்.
கடந்த ஆண்டு (2015) நவம்பர், டிசம்பர் மாதங்களில் தமிழகத்தில் பெய்த வரலாறு காணாத கொடுமழையின்போது, வெள்ளக்காட்டில் மக்கள் துயரத்தின் விளிம்பில் தத்தளித்த நேரத்தில், ஓர் அரசு ஆற்றவேண்டிய அசாதாரண செயல்பாட்டுக்குப் பதிலாக, முற்றிலும் செயலற்று, நிலை குலைந்து நின்றதன்மூலம் இது ஒரு செயலற்ற அரசு
என்பதும் உறுதியாகி விட்டது.
மத்திய அரசிடம் வாதாடிப் பெறவேண்டிய பல உரிமைகளை வெறும் சம்பிரதாயமான கடிதத்தின்மூலம் தன் கடமையை முடித்துக்கொண்டதும் இவ்வாட்சியே!
திராவிட இயக்கக் கொள்கை, சித்தாந்தம் என்று எடுத்துக்கொண்டாலும் பகுத்தறிவுக் கொள்கைக்கு முற்றிலும் முரணாகவும், கொச்சைப்படுத்தும் வகையிலும், குறிப்பாக தமிழறிஞர்களால் நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்த தை முதல் நாள்தான் தமிழ்ப்புத்தாண்டு என்ற – தி.மு.க. ஆட்சியில் சட்டமாக நிறைவேற்றப்பட்ட முடிவை மாற்றி, மீண்டும் பழைய மூடநம்பிக்கை – பார்ப்பனக்கலாச்சாரத்தை உள்ளீடாகக் கொண்ட, முற்றிலும் சமஸ்கிருத பெயர்களைக் கொண்ட பழைய ஆண்டுக் கணக்கைக் கொண்டு வந்ததன்மூலம், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, தமிழ்ச் சான்றோர்கள் ஆகியோரின் சிந்தனைக்கு எதிரான பார்ப்பனீய அரசாக நடந்து கொண்டது,
மதச் சார்பற்ற தன்மைக்கு எதிராகவும், இந்த வகையில் மத்திய பி.ஜே.பி ஆட்சிக்கு அடுத்த நிலையிலும், அதற்குத் துணைக்கோளாகவும் செயல்பட்டு வருகிறது என்பதை எவரும் மறுக்கவே முடியாது.
‘அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை’ என்ற மனித உரிமைப் போராட்டத்தை தந்தை பெரியார் தொடங்கினார். தமது இறுதிப் போராட்டமாகக் கூட அதனை அறிவித்து, அதற்கான களப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதே தன் இறுதி மூச்சைத் துறந்தார்.
இந்த நிலையில், தந்தை பெரியார் அவர்களின் அந்த மரண சாசனத்திற்கு உயிரூட்டும் வகையில், அன்னை மணியம்மையார் காலத்திலும், அதற்குப் பிறகும் தொடர்ந்து திராவிடர் கழகம் போராடிக்கொண்டு வந்திருக்கிறது.
தி.மு.க. ஆட்சியில் கலைஞர் அவர்களின் கொள்கை ஈடுபாட்டின் காரணமாக, தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரண்டு முறை அதற்கான சட்டங்கள் இயற்றப்பட்டும், பார்ப்பன சக்திகள் உச்சநீதிமன்றம் சென்று செயல்பட விடாமல் தடுத்திட முயன்றனர். ஆனால், இறுதியாக உச்சநீதிமன்றம் இந்தப் பிரச்சினையில் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக நியமனம் செய்யத் தடையில்லாத தீர்ப்பு தந்த நிலையில் (16.12.2015), அதனைச் சுட்டிக்காட்டி, உச்சநீதிமன்றத் தீர்ப்பின் வெளிச்சத்தில், இதனைச் செயல்படுத்தலாம் என்று திராவிடர் கழகத் தலைவர் இன்றைய முதலமைச்சருக்குக் கடிதம் எழுதியும் (21.12.2015), ஏற்கெனவே கொடுத்த வாக்குறுதியை செயல்படுத்தாது, எந்தவித நடவடிக்கையையும் முதலமைச்சர் எடுக்காத நிலையானது – தந்தை பெரியாரின் மனித உரிமைக் கொள்கையில், ஜாதி, தீண்டாமை ஒழிப்பு லட்சியத்தில் அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக்கு உடன்பாடில்லை என்பது தெளிவாகிவிட்டது.
எந்த வகையில் பார்த்தாலும் தற்போது உள்ள அ.இ.அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் வராமல் செய்வது என்பது தமிழ்நாடு வாக்காளர்களின் மிக முக்கியமான தலையான கடமை என்று இம்மாநாடு பிரகடனப்படுத்துகிறது.
அந்த வகையிலும், இன்றைய தினம் அகில இந்திய நிலையில், மத்தியில் ஆட்சியில் இருக்கும் பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியானது – அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடான மதச் சார்பின்மைக் கொள்கைக்கு முற்றிலும் விரோதமாக, ஒவ்வொரு அசைவிலும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறது. பாடத் திட்டத்தை காவி மயமாக்குவதிலும், இந்தி, சமஸ்கிருதத்தைத் திணிப்பதிலும் மூர்க்கத்தனமாக நடந்துகொண்டு வருகிறது. அதுபோலவே, சமூகநீதிக்கு எதிராக – மக்களவைத் தலைவராக இருக்கக் கூடியவரே வெளிப்படையாகவே கருத்துச் சொல்லும் நிலை என்பதால், இன்றைய மத்திய அரசின் சமூகநீதி விரோத போக்கை எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது. பி.ஜே.பி.யின் குரு பீடமான ஆர்.எஸ்.எஸின் தலைமையும் இட ஒதுக்கீடுக்கு எதிராகவே திடமாகவே கருத்து சொல்லி வருகிறது.
இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் இந்த மதவாத – சமூகநீதிக்கு எதிரான பி.ஜே.பி. தலைமையிலான ஆட்சியை வீழ்த்தியே
தீரவேண்டிய அவசியமும், கட்டாயமும் இருப்பதாலும், தனியார் துறைகளிலும் இட ஒதுக்கீடு கொண்டு வரப்படும் என்பதில் இன்றைய காங்கிரஸ் உறுதியாக இருப்பதாலும், மத்திய பி.ஜே.பி. அரசின் மதவாதப் போக்கை எதிர்ப்பதில் முனைப்புக் காட்டுவதாலும், தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. தலைமையிலான அரசியல் கட்சிகள், தேர்தலில் காங்கிரசை இணைத்துக் கொள்வது அவசியமானது என்பதை இம்மாநாடு ஆழ்ந்த தொலைநோக்குச் சிந்தனையோடு முடிவெடுத்து, தமிழ்நாட்டில் மே மாதம் 16 ஆம் தேதி நடக்கவிருக்கும் 15 ஆவது சட்டப்பேரவைத் தேர்தலில், தி.மு.க. தலைமையிலான – காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணியை ஆதரித்து மிகப்பெரிய வெற்றியை ஈட்டித் தருவது நமது முக்கிய கடமை என்று இம்மாநாடு திட்டவட்டமாகத்தெரிவித்துக் கொள்கிறது.
அரசியல் நோக்கத்திற்கு அப்பாற்பட்டு, தமிழ்நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, திராவிடர் கழகம் நிறைவேற்றியிருக்கும் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவு அளித்து, தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு மிகப்பெரிய அளவிற்கு வெற்றியை ஈட்டித் தருமாறு தமிழக வாக்காளர்ப் பெருமக்களை இம்மாநாடு ஒருமனதாக வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
புதுவை – மத்திய அரசுப் பிரதேசத்தில் உள்ள ஆட்சி, ‘உருட்டைக்கு நீளம் புளிப்பில் அதற்கு அப்பன்’ என்பதுபோல தமிழ்நாட்டு அ.தி.மு.க. ஆட்சியைவிட மோசமான மூடநம்பிக்கை ஆட்சியாக இருப்பதால் அதனை அகற்றி, புதுவை மாநிலத்திலும் தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தருவது என்றும் முடிவு எடுக்கிறது!’’