சென்னை:

சென்னை திருவிக நகர்  மண்டலத்திற்குட்பட்ட புளியந்தோப்பில் 1,400 படுக்கைகளுடன் தயாரான கொரோனா சிறப்பு வார்டுகளை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று காலை  நேரில் சென்று ஆய்வு செய்தார்.

சென்னையில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று 618 பேர் பாதிக்கப்பட்ட நிலையில்,   இதுவரை 13,362 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
சென்னையில் உள்ள  15 மண்டலங்களில் 6 மண்டலங்களில்  தொடர்ந்து ராயபுரம்  மண்டலம் முதலிடத்தில் உள்ளது. அங்கு, பாதிப்பு எண்ணிக்கை 2,446 ஆக அதிகரித்துள்ளது. அதைத்தொடர்ந்து,  கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,678 பேரும், திரு.வி.க. நகரில் 1,437 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், திருவிக நகர் மண்டலத்திற்குட்பட்ட புளியந்தோப்பிலும் கொரோனா தொற்று தீவிரமாகி வருகிறது. அங்கு பெரும்பாலான பகுதிகள் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகள் என்பதால், அங்கு தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியாமல், மாநகராட்சி திண்டாடி வருகிறது.
இந்த நிலையில், புளியந்தோப்பில் புதிதாக கட்டப்பட்டு வந்த அரசு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கொரோனா வார்டுகளாக மாற்றப்பட்டு உள்ளது.
சுமார் 1400 பேர் அங்கு தங்கி சிகிச்சை பெறும் வகையில், அந்த குடியிருப்பு முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டு, நோயாளிகள் சிகிச்சை பெறும் வகையில் மாற்றப்பட்டு உள்ளது. இதை  கொரோனா சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்  உடன் ஆய்வு செய்த அமைச்சர் விஜயபாஸ்கல்ர, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தாபர்.
அப்போது, சென்னையில்  கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாதவர்களுக்கு புளியந்தோப்பில் சிகிச்சை அளிக்கப்படும் என்று கூறியவர்,  நோயாளிகள் சிசிடிவி கேமரா மூலம் 24 மணிநேரமும் கண்காணிக்க ஏற்பாடு  செய்யப்பட்டு உள்ளதாகவும், சிகிச்சை மையத்தில், சிறப்பு மருத்துவ குழு முழுநேரமும் செயல்படும் என்றார்.
சென்னையில் கொரோனா பரவலை தடுக்க வரும் நாட்களில் கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்படும், ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதை பற்றி மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றார்.
மேலும்,  கொரோனா நோயாளிகளிடம் வேறுபாடு காட்டாதீர்கள்.  140 சுகாதார மையங்களில் காய்ச்சலை அறிய சோதனை செய்யப்படும். அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு தேவையான  ஆக்சிஜன் சிலிண்டர் போதிய அளவில் உள்ளது என்று கூறியவர்,  கொரோனாவுக்கு தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்தார்.