கோவை:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சியில் ஆணையாளர் உள்ளிட்ட 14 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் நகராட்சி அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது.

கோவையில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக களத்தில் நின்று நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் வருவாய் துறை, சுகாதாரத் துறை ,காவல்துறை அதிகாரிகளுக்கு நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பொள்ளாச்சி நகராட்சியில் பணியாற்றும் பெண் பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் இருவருக்கு நேற்று முன்தினம் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அப்பிரிவில் பணியாற்றும் 20 க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் நகராட்சி ஆணையாளர் ஒப்பந்ததாரர் உள்ளிட்ட 14 ஊழியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து நகராட்சி அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டு கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நகராட்சி அலுவலகத்தில் 14 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளதால் சக ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர் அதேபோல் பல்வேறு பணிகளுக்காக நூற்றுக்கணக்கானவர்கள் தினந்தோறும் நகராட்சி அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர் இதனால் அங்கு வந்து சென்ற பொதுமக்களும் அச்சத்தில் உள்ளனர். மேலும் நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக தனிமைப்படுத்திக் கொள்ள அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.