சென்னை:

பேசினாலே குற்றம் என்று புதுமையான சட்ட நெறிகள் புகுத்தப்படுகின்றன. பேசுவதே குற்றம் என்று வைத்துக் கொண்டாலும், அதற்கு ஏன் 14 நாள் விசாரணைக் கைதியாக சிறையில் அடைக்க வேண்டும்? என்று முன்னாள் மத்திய அமைச்சர் நெல்லை கண்ணன் கைதுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.

நாடு முழுவதும் சிஏஏக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வரும் நெல்லையில், இஸ்லாமிய அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய, இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன், பிரதமர் மோடி, அமித்ஷா ஜோலிய முடியுங்கள் என்று பேசினார். இது சர்ச்சையான நிலையில், பாஜகவினரின் புகாரின் பேரில் நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டு, 14 நாள் ரிமாண்ட் செய்யப்பட்டு உள்ளார்.

நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டதற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், ப.சிதம்பரம் டிவிட் பதிவிட்டு தனது கண்டத்தை தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டுவிட்டில், பேசினாலே குற்றம் என்று புதுமையான சட்ட நெறிகள் புகுத்தப்படுகின்றன. பேசுவதே குற்றம் என்று வைத்துக்கொண்டாலும், அதற்கு ஏன் 14 நாள் விசாரணைக் கைதியாக சிறையில் அடைக்க வேண்டும்?

இப்படி நினைப்பவர்களை லண்டன் மாநகர் ஹைட் பார்க் (Hyde Park) என்ற பூங்காவிற்கு அனுப்ப வேண்டும். அங்கே பேசப்படுவதை அவர்கள் கேட்க வேண்டும் பேச்சும் செயலும் இணைந்தால் தான் குற்றம்.

நெல்லை கண்ணன் பேசினார் என்று வைத்துக்கொள்வோம், என்ன தீய செயலை அவர் செய்தார்?

என பதிவிட்டுள்ளார்.