டெல்லி: நாடு முழுவதும் இதுவரை  14 கோடி பேருக்குமேல் கொரோனா சோதனை நடத்தப்பட்டு உள்ளதாகவும்,  வடமாநிலங்களில், மகாராஷ்டிரா மற்றும் தமிழகம் உள்பட தென்மாநிலங்களில் தொற்று பரவல்  வெகுவாக குறைந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
நாடு முழுவதிலும் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மாநிலஅரசுகள் தீவிரப்படுத்தி வருகின்றன. கடந்த சில நாட்களாக டெல்லி உள்பட  பல வடமாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. தினசரி புதிய பாதிப்புகள் கடந்த மாதம் வெகுவாக குறைந்த நிலையில், கடந்த சில தினங்களாக பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், தென்மாநிலங்களில் தொற்று பரவல் கட்டுக்குள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
தற்போதைய நிலையில், நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனைகளில் 4,46,952 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 38,772 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 94 லட்சத்தை தாண்டி உள்ளது.
நேற்று ஒரே நாளில் 443 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,37,139 ஆக உயர்ந்துள்ளது.  இது 1.45 சதவிகிதம்.
கடந்த 24 மணி நேரத்தில் 45,333 பேர் குணமடைந்துள்ளனர்.  இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 88,47,600 ஆக உயர்ந்துள்ளது. இதனால் நாட்டில் குணமடையும் விகிதம் 93.81 சதவீதமாக  உள்ளது.
கடநத ஒரு மாதத்தில் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிரா மாநிலம் மற்றும் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில், தொற்று பரவல் வெகுவாக குறைந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டி உள்ளது.‘
மேலும், இந்தியாவில் மொத்த கொரோனா சோதனைகள் 14 கோடி யை தாண்டி உள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துஉள்ளது.