vasan
காங்கிரசுக்கு மீண்டும் திரும்ப போவதாக, 13 நிர்வாகிகள் கூறியுள்ளதால், வாசனுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதே போல, சரத்குமார் கட்சியும் மீண்டும் உடையும் அபாயத்தில் உள்ளது. அ.தி.மு.க., கூட்டணியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த த.மா.கா.,விற்கு, கதவடைக்கப்பட்டு உள்ளது. அ.தி.மு.க.,வுடன் கூட்டணி பேசிக் கொண்டே, தி.மு.க., மற்றும் மக்கள் நலக் கூட்டணியுடன் ரகசிய பேச்சு நடத்தியதுதான், இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
தி.மு.க., கூட்டணியில், த.மா.கா.,வை சேர்க்கக் கூடாது என்று, காங்., தரப்பில் கறாராக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, த.மா.கா.,வை கூட்டணிக்கு இழுக்கும் முடிவை, தி.மு.க., கைவிட்டது. தற்போது, த.மா.கா.,விற்கு உள்ள ஒரே வாய்ப்பு, ம.ந.கூ., மட்டுமே. ஆனால், தங்களுக்கு ஒதுக்கிய, 124 தொகுதிகளில், ஒரு தொகுதியை கூட விட்டுக் கொடுக்க முடியாது என்று, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறிவிட்டதை தொடர்ந்து, அங்கும் செல்ல வாய்ப்பில்லை. ஒருவேளை, வாய்ப்பை ஏற்படுத்தி, த.மா.கா., தே.மு.தி.க., – மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தால், மீண்டும் காங்கிரசுக்கு செல்ல, த.மா.கா., முக்கிய நிர்வாகிகள், 13 பேர் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதை, அவர்கள் வாசனிடமும் தெரிவித்ததால், அவர் கடும் நெருக்கடியில் தவிப்பதாக, கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.