நாடு முழுவதும் 163 எம்.பி, எம்எல்ஏக்களுக்கு எதிராக சிபிஐ-ல் கிரிமினல் வழக்கு உள்ளது! உச்சநீதிமன்றத்தில் தகவல்

Must read

டெல்லி: நாடு முழுவதும் 163 எம்.பி, எம்எல்ஏக்களுக்கு எதிராக சிபிஐ-ல் வழக்கு உள்ளது!. 122 எம்.பி, எம்எல்ஏக்களுக்கு எதிராக அமலாக்கத்துறையில் வழக்கு உள்ளதாக  உச்சநீதிமன்றத்தில் மத்தியஅரசு தெரிவித்து உள்ளது. இந்த வழக்குகள் கடந்த 10ஆண்டுகளாக தொடர்வதாகவும் தெரிவித்துள்ளது.

எம்.பி, எம்எல்ஏக்ள் மீதான வழக்குகளை விரைந்து விசாரித்து தீா்ப்பளிக்க வலியுறுத்தி பிரபல வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய  உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுமீதான கடந்த விசாரணையின்போது, உச்சநீதிமன்றத்திற்கு உதவ மூத்த வழக்குரைஞா் விஜய் ஹன்சாரியாவை உச்சநீதிமன்றம் நியமித்திருந்தது.

இந்த நிலையில், வழக்கு நேற்று மீண்டும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சூா்யகாந்த் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது,  இந்த வழக்கு விசாரணையில் உதவ உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மூத்த வழக்குரைஞா் விஜய் ஹன்சாரியா அறிக்கை தாக்கல் செய்திருந்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது,

நாடு முழுவதும்  எம்.பி, எம்எல்ஏக்கள் 122 பேருக்கு எதிரான பண மோசடி வழக்குகளை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. அவா்களில் 51 பர் முன்னாள், இந்நாள் எம்.பி.க்கள்.  எம்.பி.க்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட 28 வழக்குகளின் விசாரணை நிலுவையில் உள்ளன; விசாரணை நீதிமன்றங்களில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய வேண்டிய நிலையில் 10 வழக்குகள் உள்ளன.

அதுபோல,  121 எம்.பி, எம்எல்ஏக்களுக்கு எதிராக பல்வேறு குற்ற வழக்குகளை சிபிஐ விசாரித்து வருகிறது. இதில் 37 வழக்குகளின் விசாரணை நிலுவையில் உள்ளன.

5 எம்.பி.க்கள், 9 எம்எல்ஏக்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் காலாவதியாகிவிட்டன.

மேலும் இதுதொடர்பாக அவர் அளித்துள்ள ஆலோசனையில், குற்றஞ்சாட்டப்பட்டவா் விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் அந்த நபருக்கு அளித்த ஜாமீனை ரத்து செய்வது குறித்து நீதிமன்றங்கள் பரிசீலிக்கலாம் என்றும்,  எம்.பி.க்கள், எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை தினசரி விசாரிக்குமாறு நீதிமன்றங்களுக்கு அறிவுறுத்தலாம். சில வழக்குகளுக்கு முன்னுரிமை அளித்து விசாரிக்குமாறு சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களுக்கு உயா்நீதிமன்றங்கள் மூலம் அறிவுறுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், இந்த வழக்குகளை கண்காணிக்க கண்காணிப்பு குழு அமைக்கப்பட வேண்டும் என்றும், அவர்கள் மூலம் எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான விசாரணைகள் தாமதமாவதற்கான காரணங்களை கண்டறிந்து விசாரணையை விரைந்து முடிப்பதற்கான உத்தரவுகளைபிறப்பிக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

அத்துடன், பல மாநிலங்களில் எம்.பி.எம்எல்ஏக்கள் மீதான வழக்குள் எந்தவித காரணமுமின்றி  திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும், அதன்படி கடந்த 2013-ஆம் ஆண்டு உத்தர பிரதேசத்தில் உள்ள முஸாஃபா்நகரில் நடைபெற்ற கலவரம் தொடா்பாக மீரட் மண்டலத்தில் 510 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 321-இன் கீழ் பதிவு செய்யப்பட்ட 77 வழக்குகள் உரிய காரணம் தெரிவிக்கப்படாமல் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இதேபோல் கா்நாடகத்தில் 62 வழக்குகளும், கேரளத்தில் 36 வழக்குகள், தெலங்கானாவில் 14 வழக்குகள், தமிழ்நாட்டில் 4 வழக்குகளும் காரணம் தெரிவிக்கப்படாமல் திரும்பப் பெறப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article