திருச்சி: தண்டவாள  பணிகள் நடைபெற்று வருவதால், திருச்சி  கோட்டத்தில் இயக்கப்பட்டு வரும்  12 முன்பதிவில்லா பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

திருச்சிராப்பள்ளி சந்திப்பில் தண்டவாள சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக நேற்று ( ஜூலை 31ந்தேதி) அந்த வழியாக செல்லும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த  20-க்கும் மேற்பட்ட ரயில்கள் 5 மணி நேரம் தாமதமானது.  இதனால் ரயில் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து ரெயில்வே முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை என பயணிகள் குற்றம் சாட்டினர்.

இந்த நிலையில்,  திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்துக்குள் தண்டவாள பராமரிப்பு காரணமாக  இரு மார்க்கத்திலும் ரயில் சேவை தாமதமாவதை தடுக்கும் வகையில், திருச்சி கோட்டத்திற்கு உட்பட்ட, அந்த பகுதியில் இயக்கப்பட்டு வரும்  முன்பதிவில்லா 12 பயணிகள் ரயில் சேவை இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

அதன்படி,  , திருச்சி – ராமேஸ்வரம், திருச்சி – ஈரோடு, திருச்சி – தஞ்சை பயணிகள் ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது  மேலும், தஞ்சை – மயிலாடுதுறை, மயிலாடுதுறை – விழுப்புரம், திருச்சி – கரூர், திருச்சி – காரைக்கால், அரக்கோணம் – வேலூர் உள்ளிட்ட 12 பயணிகள் ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.