சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அஞ்சல் ஓட்டு தொடர்பான விவாதங்களும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. தமிழகத்தில் மட்டும் 80வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் சுமார் 12 லட்சத்துக்கும் அதிகமானோர்  உள்ள நிலையில், தேர்தலில் வெற்றித் தோல்வியை தீர்மானிப்பது தபால் வாக்குகள்தான் என்ற அச்சம் எதிர்க்கட்சிகளிடையே எழுந்துள்ளது.

அதனால்தான், திமுக உள்பட சில கட்சிகள், தபால் வாக்குக்கு எதிராக நீதிமன்றத்தை நாடியுள்ளன.  வழக்குகள் நிலுவையில் உள்ளன. தபால் வாக்குகள் குறித்து  இதுவரை நடைபெற்ற எந்தவொரு தேர்தலிலும் சர்ச்சை எழாத நிலையில், தற்போதைய தேர்தலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

தபால் வாக்கு என்பது, வாக்குச்சாவடி வர முடியாத முதியோர்கள், எளிதில் தொடர்பு கொள்ள முடியாத பகுதிகளில் பணியாற்றுபவர்கள், தேர்தல் பணிகளில் ஈடுபடும் ஊழியர்கள், ராணுவத்தினர், காவல்துறையினர், மாற்றுத்திறனாளிகள், உள்பட அத்தியாவசிய பணிகளில் உள்ளவர்கள், தேர்தலுக்கு முன்னதாகவே, தபால் வாக்குக்கான  வாக்குச்சீட்டினை பெற்று, அதில் தங்கள் ஓட்டினை பதிவு செய்யலாம். அதன்படி தபால் வாக்களிக்க விருப்பம் உள்ளவர்கள், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலரிடமிருந்து படிவம் 12டி-ஐ பெற்று பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.

ஆனால், தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு அமல்படுத்திய புதிய நடைமுறையின்படி,  80வயதுக்கு மேலானவர்களும் தபால் வாக்கு செலுத்தலாம் என்றும், ரயிலை இயக்கும் லோகோ பைலட், கார்டுகள், டிக்கெட் பரிசோதகர்கள், பத்திரிகையாளர்கள் போன்றோரும்  தபால் வாக்கு அளிக்க தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த நடைமுறைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

தேர்தல் ஆணையத்தின் இந்த புதிய நடைமுறையின் மூலம், அதிகாரத்தில் உள்ளவர்கள் அதிகளவில் முறைகேடுகளில் ஈடுபட வாய்ப்பாக அமைந்துவிடும் என்று குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

தமிழக  சட்டப்பேரவைத் தேர்தலில் 80 வயதுக்கும் மேற்பட்ட சுமார் 13 லட்சம் பேர் தபால் வாக்கு அளிக்க தகுதி பெற்றுள்ளதால், அது அரசியல் கட்சிகளுக்கு கிலியை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பதில் தபால் வாக்கு முக்கிய பங்காற்றும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தபால் வாக்களிக்க அனுமதி பெற்ற 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் மட்டும் 12,91,32 பேர் . அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 718 பேரும், குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 8 ஆயிரத்து 253 பேரும் உள்ளனர். இது  தமிழகத்தில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள 6.27 கோடி வாக்காளர்களில் 2.07 சதவீதம்.

இதுமட்டுமின்றி,  மாற்றுத்திறனாளி  வாக்காளர்கள் 4.62 லட்சம் பேர் உள்ளனர். மேலும், தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ராணுவ வீரர்கள், காவல் துறையினர் என சுமார் 4.5 லட்சம் பேர் தபால் வாக்குகள் செலுத்த அனுமதிக்கப்பட்டு உள்ளது.

80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களை அஞ்சல் வாக்குகளைப் பயன்படுத்த அனுமதிக்க தேர்தல் ஆணையம் எடுத்த முடிவுக்கு  எதிர்க்கட்சிகள் கடுமையாக  எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.  இதுவரை, அரசாங்க ஊழியர்கள், காவல்துறை ஊழியர்கள் மற்றும் தேர்தல் கடமையில் ஈடுபடுத்தப்பட்ட பாதுகாப்புப் படையினர் மட்டுமே அஞ்சல் வாக்குகளுக்கு அனுமதிக்கப்பட்டது. சமீப காலமாக 80வயதுக்கு மேற்பட்டோர் உள்பட மேலும் பலருக்கு தபால் வாக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டு இருப்பதுதான் சர்ச்சையை எழுப்பி உள்ளது. இதனால், தேர்தல் முடிவுகளை தபால் வாக்குகள் தீர்மானிக்கும் சூழல் எழுந்துள்ளது. இதனால், அரசியல் கட்சிகள் மிரண்டுபோய் உள்ளன.

கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது,  சுமார் 1 சதவிகித வாக்குகள் மட்டுமே திமுக அரியனை ஏறுவதற்கு தடையாக இருந்தது. அதுபோல  பல தொகுதிகளில் சொற்ப வாக்குகள் வித்தியாசமே வெற்றி தோல்விகளை தீர்மானித்தது.

காட்டுமன்னர்கோயில் தொகுதியில் வெற்றி வித்தியாசம் வெறும் 23 வாக்குகள் மட்டுமே. மேலும், 2 தொகுதிகளில் 100க்கும் குறைவான வாக்குகளே வெற்றி தோல்வியை முடிவு செய்தன. 18 தொகுதிகளில் ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகளே வெற்றி தோல்விகளை நிர்ணயித்தன.

இதுபோன்ற சூழலில், தேர்தல் ஆணையம் அளித்துள்ள தபால் வாக்கு சலுகை, வெற்றி தோல்வி நிர்ணயிப்பதில் முக்கிய பங்காற்றும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தபால் வாக்கு  வசதி வாக்காளர்களை தங்கள் வேட்பாளர்களை தொலைதூரத்தில் தேர்வு செய்ய அனுமதிக்கும்  வேளையில், குறைந்த வாக்கு வித்தியாசத்திலான வெற்றித்தோல்வி வவகாரத்தில் சந்தேகத்துக்கு வழி வகுக்கும் என நம்ப்படுகிறது.