திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழாவையொட்டி, இன்று கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்படி கோவில் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. இன்றுமுதல் 12 நாட்கள் மாசி திருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளது.
தமிழக்கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை என்று போற்றப்படும் இடம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இவ்விடத்தில் முருகன், சூரபத்மனை அழித்ததாக கந்த புராணம் கூறுகிறது. இங்கு ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித்திருவிழா பிரசித்தி பெற்றது.
12 நாட்கள் நடைபெறும் மாசித்திருவிழாவையொட்டி இன்று காலை 5.30 மணியளவில் கோவிலில் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. கொடியேற்றத்தைத் தொடர்ந்து கொடிமரத்திற்கு 16 வகையான சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
மாசித்திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று 25ஆம் தேதி சனிக்கிழமை நள்ளிரவு 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், அதிகாலை 5 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. அன்று மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.
முன்னதாக கொடிபட்ட ஊர்வலத்துடன் திருவிழா தொடங்கிய நிலையில் ரத வீதிகளில் யானை மீது கொடிப்பட்ட ஊர்வலம் நடைபெற்றது. கொடியேற்றத்தை தொடர்ந்து 3ம் தேதி சிகப்பு சாத்தி கோலத்திலும், 4ஆம் தேதி பச்சை சாத்தி கோலத்திலும் சண்முகர் காட்சி அளிக்கிறார். தொடர்ந்து 6ம் தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டமும், 7ஆம் தேதி தெப்பத் திருவிழாவும் நடைபெறுகிறது.
திருச்செந்தூர் சுப்பிரமண்யசுவாமி திருக்கோயில் 12 நாட்கள் மாசித்திருவிழா – முழு விவரம்…