சென்னை:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் போக்குவரத்து வசதிக்கு 11,270 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரும்  பொங்கள் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக சென்னையில் இருந்தும், மற்ற மாவட்ட தலைநகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது.
இந்த வரும்  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11,12,13 ஆகிய தேதிகளில் 11 ஆயிரத்து 270 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தமிழகம் முழுவதிற்கும் ஜன.11,12,13 ஆகிய தேதிகளில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
இதற்காக சென்னை கோயம்பேட்டில் 29 டிக்கெட் கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளது. பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து 3 நாட்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக ஜன.,11,12,13 ம் தேதிகளில் பயணிகள் பஸ் ஏறும் இடம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம்:
ஆந்திரா பகுதி வழியாக செல்லும் பஸ்கள் அண்ணா நகர் (மேற்கு) பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும். 
இ.சி.ஆர். வழியாக சிதம்பரம், கடலூர் செல்லும் பஸ்கள் அடையாறு காந்திநகரில் புறப்படும்.
தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக செல்லும் பஸ்கள் தாம்பரம் சானிடோரியத்தில் இருந்து புறப்படும். 
வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஓசூர் செல்லும் பஸ்கள் பூந்தமல்லியிலிருந்து பஸ்கள் புறப்படும்.
திருச்சி, மதுரை, நெல்லை, நாகர்கோவில் செல்லும் பஸ்கள் , விழுப்புரம் திருவண்ணா மலை, நெய்வேலி, பண்ருட்டி , கள்ளக்குறிச்சி செல்லும் பஸ்கள் கோயம்பேட்டில் இருந்து புறப்படும் 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.