சென்னை
இதுவரை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்காக 11 லட்சம் மேல்முறையீட்டு மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலின் போது திமுகவினர் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ரூ..1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தனர். அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் முதல் தகுதி வாய்ந்த மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்படுகிறது; இதற்குக் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
”கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்காகத் தமிழகம் முழுவதுமிருந்து 11 லட்சம் மேல்முறையீட்டு மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்களைச் சார் ஆட்சியர் – துணை ஆட்சியர் – வருவாய் கோட்ட அலுவலர்கள் பரிசீலித்து வருகின்றனர்.
இன்று, விருதுநகர் மாவட்டம் – சாத்தூர் வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படும் பணிகளை ஆய்வு செய்து மேல்முறையீடு செய்திருந்த மகளிரில் மூவரிடம் கைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசினோம்.
அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை எடுத்துக் கூறிய போது, அதன் நியாயத்தை உணர்ந்து, நாம் கூறியதை அவர்கள் ஏற்றுக் கொண்டனர்.
அரசு அலுவலர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விதிகளைப் பூர்த்தி செய்கிற ஒரு மகளிர் கூட, விடுபட்டுவிடக் கூடாது என்ற அடிப்படையில் பணியாற்றிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளோம்.”
என்று தெரிவித்துள்ளார்.