சென்னை: தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்று இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. மேலும் பள்ளிகளிலும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும், ஏற்கனவே நடைபெற்று முடிந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 20ஆம் தேதி  வெளியிடப்பட்டது.  தேர்வில் கலந்துகொள்ளாத மாணவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கும் வகையில்  ஜூலை 27ம் தேதி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு நடைபெறும் என்றும்,  ஆகஸ்ட் 2ஆம் தேதி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு நடைபெறும் என்றும் பள்ளி கல்வித்துறை அறிவித்தது. அத்துடன்,  10 மற்றும் 12 ஆம் மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் 24ந்தேதி பெறலாம்  என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருந் தார்.

இந்த நிலையில், இன்று தற்காலிக சான்றிதழ், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  அரசு தேர்வுகள் இயக்கத்தின்  இணையதளம் https://www.dge.tn.gov.in/ மூலம் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . மேலும் மாணாக்கர்கள் பள்ளிகளிலும் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம்.

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 90 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடி ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.