சென்னை,
தீபாவளியன்று 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ய அறிவித்து இருந்தனர். இதற்கு சென்னை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது.
சென்னையை சேர்ந்தவர் வக்கீல் பேட்ரிக் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை மகத்தான ஒரு சேவையாகும். இந்த சேவையினால், விபத்தில் ஏற்படும் உயிர்பலி எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளன. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் போனஸ் தொகையை அதிகரிக்க கோரி தீபாவளி பண்டிகை நாளில் வேலை நிறுத்த போராட்டத்தை ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அறிவிக்கின்றனர்.
கடந்த ஆண்டு அறிவித்தது போல, இந்த ஆண்டும் போராட்டத்தை அவர்கள் அறிவித்துள்ளனர். ஆனால், தீபாவளி நாளில், பட்டாசு விபத்துகளில் பாதிக் கப்படுவோருக்கு ஆம்புலன்ஸ் ஊழியர்களின் சேவை பெரிதும் பயனுள்ள தாக உள்ளது.
எனவே, ஆம்புலன்ஸ் ஊழியர்களின் போராட்டத்தை சட்டவிரோதமானது என்று அறிவிக்கவேண்டும். தீபாவளியன்று ஆம்புலன்ஸ் சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று இந்த ஐகோர்ட்டு உத்தரவிடவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
ambulance
தீபாவளி போனஸ் வழங்காததை கண்டித்து வரும் 28ம் தேதி இரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட  போவதாக 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் (தமிழ்நாடு) அறிவித்துள்ளது.   இவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கும்  போனஸ் தொகை இந்த ஆண்டு வழங்கப்படவில்லை. எனவே, ஊழியர்கள் தங்களுக்கு சட்டப்படி குறைந்தது 8.33 சதவீதம் போனஸ்  தொகையாவது வழங்க வேண்டும் என்று 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்திடம் முறையிட்டு வருகின்றனர். ஆனால் இதுவரை போனஸ் குறித்து எந்தவித தகவலும் இல்லை.
எனவே, வரும் 28ந் தேதி இரவு 8 மணி முதல்  29நந் தேதி இரவு 9 மணி வரை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம். அதற்குள் எங்களுடன் பேச்சுவார்த்தை  நடத்தி 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்தினர் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில்  ஈடுபடுவோம் என்று அறிவித்திருந்தனர்.
ஆம்புலன்ஸ் ஊழியர்களின் போராட்ட அறிவிப்பை அடுத்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.நேற்று  தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு  விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு பிளடர் ஆஜராகி, ‘ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது சட்டவிரோதமானது. அதை அனுமதிக்க முடியாது’ என்று கூறினார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ‘ஆம்புலன்ஸ் ஊழியர்களின் போராட்டத்துக்கு கடந்த ஆண்டு தடை விதித்து இந்த ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவு, இந்த ஆண்டுக்கும் பொருந்தும். மேலும், தீபாவளி அன்று ஆம்புலன்ஸ் சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளார்.