சென்னை:
கிண்டியில் செயல்பட்டு வரும் சிப்பெட் நிறுவனத்தின் தலைமையகம் சென்னையில் இருந்து மாற்றப்படாது. அங்கேயே தொடர்ந்து செயல்படும் என்று மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் ஆனந்த குமார் கூறியுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள சிப்பெட் நிறுவனத்தின் (மத்திய பிளாஸ்டிக் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனம்) தலைமையகம் டெல்லிக்கு மாற்றப்பட இருப்பதாக தகவல் வெளியானது.  இதற்கு தமிழக அனைத்து கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். கர்நாடகாவை சேர்ந்த மத்திய அமைச்சர்தான் இதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் என்று குற்றம் சாட்டப்பட்து.
சென்னை – கிண்டி தொழிற்பேட்டையில் 1968ம் ஆண்டு சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் தொடங்கப்பட்டது சிப்பெட் நிறுவனம். மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறையின் கீழ் இயங்கும் பொதுத் துறை நிறுவனமான இது, நாட்டின் முக்கியமான பிளாஸ்டிக் தொழில்நுட்பக் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையமாகத் திகழ்கிறது.
சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல்கலைக்கழகங்களோடு இணைந்து இந்த கல்வி நிறுவனம் செயல்படுகிறது. இந்தக் கல்வியாண்டின் தொடக்கத்தில் எடுக்கப்பட்ட கணக்கின்படி, 13,376 மாணவர்கள் இந்நிறுவனத்தில் பயின்றுவருகிறார்கள்.
cipet1
கடந்த 9 ஆண்டுகளில் சுமார் ரூ.250 கோடி வருவாய் ஈட்டியிருக்கிறது. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிப்பெட் நிறுவனத்தைத் தனியார்மயமாக்கும் முயற்சிகள் நடந்துவருகின்றன.
வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில், 1999ல் முதல் முயற்சி நடந்தது. அடுத்து, மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில், 2007ல் அடுத்த முயற்சி நடந்தது.
தமிழக அரசியல் கட்சிகளின் எதிர்ப்பினால் இம்முயற்சிகள் கைவிடப்பட்டன. இந்நிலையில், இந்நிறுவனத்தின் தலைமையகத்தை சென்னையிலிருந்து டெல்லிக்கு மாற்றும் முயற்சிகளில் பாஜக அரசு இறங்கியிருப்பதாக தகவல் வெளியாகவே மீண்டும் அரசியல் கட்சியினர் எதிர்ப்பை காட்டத் தொடங்கினர்.
சிப்பெட் தலைமையகத்தை சென்னையில் இருந்து மாற்றக்கூடாது என்று அரசியல் கட்சி தலைவர்கள் மத்திய அரசை கேட்டுக்கொண்டனர். இந்நிறுவனத்தின் தலைமையகம் சென்னையிலேயே நீடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி கடிதம் எழுதினார்.
அதேபோல, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன், மதிமுக பொதுச் செயலர் வைகோ உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் இதுகுறித்துப் பேசியிருக்கின்றனர்.

மத்திய அமைச்சர் அனந்தகுமார்
மத்திய அமைச்சர் அனந்தகுமார்

இதையடுத்து, இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார் மத்திய அமைச்சர் ஆனந்தகுமார், டெல்லியில் செய்தி யாளர்களை சந்தித்தபோது, சிப்பெட் நிறுவனத்தின் தலைமையகம் சென்னையில் இருந்து மாற்றப்படாது என்று கூறினார்.
சென்னை கிண்டியிலேயே சிப்பெட் தொடர்ந்து செயல்படும் என்று கூறிய அவர், டெல்லியில் மற்றொரு தலைமையகம் அமைப்பதற்கான தேவை தற்போது ஏற்பட்டு உள்ளது என்று கூறினார்.
மேலும் ஒரு தலைமையகம் மட்டும் அல்லாமல், மாநிலங்களில் மண்டல தலைமையகங்களை தொடங்கவும் மத்திய அரசு ஆலோசித்து வருவதாகவும் கூறினார்.
100 சிப்பெட் கிளைகளை உருவாக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் எண்ணம். அதற்கான தேவை ஏற்பட்டு உள்ளது.
இது குறித்து நானும், எனது இலாகாவின் துணை அமைச்சர்களும் அமைச்சக செயலாளர்களுடன் ஆலோசித்து வருகிறோம். மத்திய அரசின் இந்த முடிவை யாரும் தவறாக எடுத்துகொள்ளக் கூடாது. மத்திய அரசு அதிகமான சிப்பெட்களை உருவாக்க ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
சென்னை சிப்பெட் வளர்ச்சிக்கு மத்திய அரசு என்றும் துணை நிற்கும் என்றும் ஆனந்த குமார் கூறியுள்ளார்.