சென்னை: 10, 12 மாணவர்களுக்கும் ஆன்லைனில் வகுப்பு நடத்தலாமே என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையும், கல்லூரிகளுக்கும் ஜனவரி 30ந்தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், 10, 11, 12ம் வகுப்புகளுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நெல்லையைச் சேர்ந்த அப்துல் வஹாபுதீன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில்,  கொரோனாவின் முதல் மற்றும் இரண்டாம் அலைகளின் போது பள்ளிகள் முழுவதுமாக மூடப்பட்டு, ஆன்லைன் வழியாகவே வகுப்புகள் நடத்தப் பட்டது. ஆனால், தற்போது கொரோனாவின் மூன்றாவது அலை மிக தீவிரமாக பரவி வரும் சூழலில், 1முதல் 9ஆம் வகுப்பு வரை மட்டுமே மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடைபெறுவதாகவும், 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறுகிறது. இதனால் அவர்கள் எளிதில் தொற்று பரவலுக்கு ஆளாக நேரிடும். எனவே, சிபிஎஸ்சி, மெட்ரிகுலேஷன், மற்றும் மாநில பாடத்திட்டத்தின் கீழான பள்ளிகள் என அனைத்து பள்ளிகளிலும் நேரடி வகுப்புகளுக்கு தடை விதித்து, ஆன்லைன் வழியாக மட்டுமே வகுப்புகளை நடத்த உத்தரவிட வேண்டும் என  கூறியிருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான , அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம்.  10 முதல் 12 வரையிலான வகுப்புகளின் மாணவர்கள் முதல் தவணை தடுப்பூசி எடுத்துக்கொள்ளவே பள்ளிக்கு அழைக்கப்படுவதாகவும், நேரடி வகுப்புகள் நடத்துவதும், கலந்து கொள்வதும் கட்டாயமில்லை எனவும்  தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள், நாடு முழுவதும் கொரோனா  மூன்றாவது அலை அதிகரித்துவரும் நிலையில் 10, 11, 12ஆம் வகுப்புகளின் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்துவதை தவிர்க்கும்படியும், ஆன்லைன் மூலமாக வகுப்புகளை நடத்தும்படியும் தமிழக அரசுக்கு அறிவுறுத்தினர். இதனால்,  ஆசிரியர்கள், மாணவர்களும், பணியாளர்கள் என அனைவரின் பாதுகாப்பும் உறுதிசெய்யப்படும் என தெரிவித்தனர்.