சென்னை: தமிழகத்தில் தியேட்டரை திறக்க திரையரங்கு உரிமையாளர்கள் உள்பட நடிகர்கள் விஜய், சிம்பு ஆகியோர் தமிழகஅரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். அதையடுத்து தமிழகஅரசும் தியேட்டர்களில் 100 சதவிகித இருக்கைகளுடன் படம் திரையிட அனுமதி வழங்கி உள்ளது.

இந்த நிலையில், நடிகரும், எம்எல்ஏவுமான கருணாஸ், ‘சிம்புக்கு கொரோனா வந்தால் தான் தெரியும்’ என்று  கருணாஸ் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார். ஆனால், விஜய் உள்பட மற்ற திரையுலகினர் மீது எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் அவர் சாடியிருப்பது, திரையுலக அரசியலை வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது.

இன்று சென்னை டிஜிபி அலுவலகத்தில் மனுகொடுக்க வந்த நடிகர் கருணாஸ்,  சென்னை நந்தனத்தில் இருந்து பசும்பொன் வரை தேசிய தெய்வீக யாத்திரை நடத்த அனுமதி கோரினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், ‘ 1994ம் ஆண்டு தேவர் சிலையை ஜெயலலிதா திறந்து வைத்தார். மதுரை ஏர்போர்டுக்கு முத்துராமலிங்க தேவரின் பெயரை வைக்க வேண்டும். கள்ளர், மறவர் உள்ளிட்ட இனத்தோரை சேர்த்து தேவர் இனம் என்று அறிவித்த அரசாணையை நடைமுறைபடுத்த வேண்டும்’ என பல கோரிக்கைகளை கூறினார்.

அதையடுத்து, திரையரங்குகளில் 100% பார்வையாளர்களை அனுமதித்தது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழகஅரசுக்கு கோரிக்கை வைத்தவர்,  50% இருக்கைகளுக்கு அனுமதி அளித்தால் போதும், இல்லையெனில் இத்தனை மாதங்கள் பட்ட கஷ்டம் வீணாக போய்விடும்’ என்று தெரிவித்தார்.

சிம்பு தியேட்டரை திறக்க வலியுறுத்தி பேசியது குறிதது பதில் தெரிவித்த கருணாஸ், கொரோனா தொற்றை வெல்வோம், கொல்வோம் என்று அவர் கூறியது தவறு’ ‘அவருக்கு கொரோனா வந்தால் தான் தெரியும். கொரோனாவால் பாதிக்கப்பட்டு நான் மீண்டு வந்துள்ளேன்  என்றும் கூறினார்.

ஆனால், விஜய் மற்றும் திரையரங்க உரிமையாளர்களின் கோரிக்கை குறித்து கருத்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.