தஞ்சாவூர்: தஞ்சையில் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த 100 கோடி மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டு இருப்பதாக மாநகராட்சி அறிவித்து உள்ளது. ஆனால், அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகத்திடம் இருந்து 30 ஏக்கர் நிலம் எப்போது மீட்கப்படும் என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றதும், ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலங்களை மீட்பதில் முனைப்பு காட்டி வருகிறது. அதுபோல, கோவில் நிலங்களையும் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டு வருகிறது. அதன் அடிப்படையில் மாவட்டங்கள் தோறும், ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து அரசு நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தஞ்சை மாநகராட்சிக்கு சொந்தமான தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த 100 கோடி மதிப்புள்ள 2.13 ஏக்கர் நிலத்தை அதிகாரி கள் முன்னிலையில் கையகப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான 2.13 ஏக்கர் நிலத்தில் தனியார் திரையரங்கம், காவேரி லாட்ஜ், தஞ்சாவூர் யூனியன் கிளப் ஆகியவை 100 ஆண்டுகளுக்கு மேலாக 99 வருட குத்தகை அடிப்படையில் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த மே மாதம் குத்தகை காலம் முடிவடைந்ததையொட்டி அதிலிருந்து குத்தகைதாரர்கள் வெளியேற்ற மாநகராட்சி நிர்வாகம் அறிவித்தது.
மேலும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ளுமாறு முறைப்படி நோட்டீஸ் வழங்கியது. இந்த நிலையில் இன்று காலை 3 கட்டிடங்களுக்கும் தமிழ்நாடு பொது வளாகங்கள் சட்டம் 1975ன் படி தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து மாநகராட்சி வசம் கையகப்படுத்தும் பணி தொடங்கியது. அதன்படி ஜுபிடர் திரையரங்கில் முகப்பில் ஆக்கிரமிப்பில் இருந்து வெளியேறுமாறு தனி நபர்கள் யாரும் இந்த சொத்துக்குள் நுழையக்கூடாது என பொது அறிவிப்பை தண்டோரா மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதேபோல் காவேரி லாட்ஜ் மற்றும் தஞ்சாவூர் யூனியன் கிளப் முகப்பிலும் பொது அறிவிப்பை தண்டோரா மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.
இதேபோல் தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே 10 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும் விரைவில் கையகப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தனர். தற்போது கையகப்படுத்தப்பட்டு இடத்தின் மதிப்பு 100 கோடிக்கு மேல் இருக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள அந்த பகுதி மக்கள், திறந்தவெளி சிறைக்காக ஒதுக்கப்பட்ட அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டியுள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகத்திடம் இருந்தும் நிலங்களை மீட்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
30ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள தஞ்சாவூர் திறந்தவெளி சிறைச்சாலை! தமிழகஅரசின் கையாலாகதனம்