சென்னை:

மிழகத்தில் திறந்தவெளி சிறைச்சாலைகளை உருவாக்க வேண்டும் என்று நீதிமன்றங்கள் பலமுறை உத்தரவிட்ட நிலையில், தஞ்சாவூரில் திறந்தவெளி சிறைச்சாலைக்கான நிலம் ஒதுக்கப்பட்ட நிலையில், அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.

தஞ்சாவூர் திறந்தவெளி சிறைச்சாலைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள நிலையில், அதனிடம் இருந்து நிலத்தை கையப்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும்,  தமிழகஅரசின் கையாலாகதனம் காரணமாக 30ஆண்டுகளை கடந்தும் திறந்த வெளி சிறைச்சாலை அமைக்க முடியாத அவலம் நீடித்து வருகிறது.

தண்டனை பெற்ற கைதிகள், தங்களின் தண்டனையை சுதந்திரமாகவும், தொழில் வாய்ப்புகளை உருவாக்கி கொள்ளும் வகையிலும் அமைத்துக் கொள்ள வசதியாக, தமிழகத்தில் திறந்தவெளி சிறைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, தமிழகத்தில் முதல் திறந்தவெளி சிறைச்சாலை, கோவை சிங்காநல்லூரில் திறக்கப்பட்டது. அதன்பின், சேலத்தில் திறந்தவெளி சிறைச்சாலை திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மிகப்பெரிய திறந்தவெளி சிறைச்சாலையாக, சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் அருகேயுள்ள புரசடை உடைப்பில், 86 ஏக்கர் பரப்பளவில் புதிய திறந்தவெளி சிறைச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிறைச்சாலைகளில் அடைக்கப்படும் கைதிகள் விவசாயப் பணிகள் மேற்கொள்வார்கள். இதற்காக அவர்களுக்கு குறிப்பிட்ட அளவு ஊதியமும் வழங்கப்படும். இதற்காக சிறை கைதிகளை சில நிபந்தனைகள் அடிப்படையில் சிறைத்துறை நிர்வாகம் கைதிகளை தேர்வு செய்கிறது.  திறந்தவெளி சிறையில் கைதிகள்  சுதந்திரமாக நடமாட முடியும் என்பதால், அங்கு செல்ல தண்டனை கைதிகள் பலரும் ஆர்வமாக உள்ளனர்.

இந்த நிலையில், தஞ்சாவூரில் திறந்தவெளி சிறைச்சாலை அமைக்க கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்டது. ஆனால், அந்த இடத்தை சாஸ்தாரா பல்கலைக்கழகம் ஆக்கிரமதித்து கட்டிடங்களை எழுப்பி உள்ளதால், திறந்தவெளி சிறைச்சாலைப் பணிகள் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், உச்சநீதிமன்றமே, நிலத்தை அரசிடம் ஒப்படைக்க கடந்த 2018ம் ஆண்டு உத்தரவிட்ட நிலையிலும், நிலத்தை மீட்டாகமல் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் மெத்தனம் காட்டி வருகிறது.

தஞ்சை மாவட்டத்தில் திருமலை சமுத்திரம் பகுதியில் செயல்படுகிறது சாஸ்த்ரா பல்கலைக் கழகம். திறந்த வெளி சிறைச்சாலைஅமைப்பதற்காக ஒதுக்கப்பட்டிருந்த அரசு நிலத்தை சட்ட விரோதமாக ஆக்கிரமித்து கடந்த 22 வருடங்களுக்கும் கட்டிடங்கள் கட்டி செயல்பட்டு வருகிறது. அதாவது, 58.17 ஏக்கர் நிலத்தில் சுமார் 30 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலத்தை ஆக்கிரமித்து அதில் 28 கட்டிடங்களையும் எழுப்பியுள்ளது சாஸ்த்ரா பல்கலைக்கழகம்.

“இன்றுவரை, அந்த நிறுவனத்தில் இருந்து நிலம் மீட்கப்படவில்லை அல்லது இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து எங்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை” என்று சிறைத்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

இதன் காரணமாக 4வது திறந்வெளி சிறைச்சாலையாக அறிவிக்கப்பட்ட தஞ்சாவூர் திறந்த வெளி சிறைச்சாலை 30 ஆண்டுகளை கடந்தும் செயல்படுத்த முடியாத அவல நிலை நீடித்து வருகிறது.