சென்னை: அரசு பள்ளிகளில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் தேவை உள்ளது. காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிகல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் பள்ளிகல்வித்துறை செயலாளர், பள்ளி கல்வித்துறை ஆணையர், இயக்குனர் மற்றும் இணை இயக்குனர்கள் கலந்து கொண்ட துறை சார்ந்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், இந்த ஆய்வு கூட்டத்தில், பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் மாவட்ட அளவில் எந்த நிலையில் உள்ளது என அதிகாரிகளிடம் கேட்டு ஆய்வு செய்யப்பட்டதாகவும்,  பள்ளி உட்கட்டமைப்பு குறித்து அதிகளவில் ஆலோசிக்கப்பட்டதாகவும், விவாதிக்கப்பட்ட விவரங்கள் குறித்து மேலும், விளக்கம் அளிக்க 10 நாட்கள் அதிகாரிகளுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அரசு பள்ளிகளில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் தேவை, அந்த காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை டெட் தேர்வு நடத்த வேண்டும் என்று மத்திய அரசு விதி உள்ளது அந்த அடிப்படையில் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அந்தந்த ஆண்டில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு உரிய முன்னுரிமை வழங்கப்படும் எனவும் கூறினார்.

பள்ளிகளில் இடை நிற்றல் விகிதம் குறைந்துள்ளதாகவும், அது குறித்த கணக்குகள் எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். அரசு பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவது தொடர்பாக தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப துறைக்கு, பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழங்க வேண்டிய தகவல்களை கொடுத்து விட்டதாகவும், இந்த ஆண்டே மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவது குறித்து தகவல் தொழில் நுட்ப துறை முடிவெடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

பின்னர் கல்வி தொலைக்காட்சி சிஇஓ குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர்,  கல்வி தொலைக்காட்சியின் சிஇஓ -ஆக தேர்வு செய்யப்பட்ட மணிகண்டன் பூபதியின் பணியாணை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் அவரின் பின்புலம் குறித்து ஆராய கூடிய பணி நடைபெற்று வருகிறது. அவரைப் பற்றி வரக்கூடிய தகவல்கள் உண்மையாக இருந்தால் ஏற்கனவே விண்ணப்பித்திருந்த நபர்களிலிருந்து தகுதியான ஒரு நபர் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்படுவார். ஆனால் தற்போது எந்த முடிவுக்கும் நாம் செல்ல முடியாது. விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.