அரசு சட்டக் கல்லூரிகளில் அம்பேத்கரின் படத்தை வைக்கலாமே! உயர்நீதி மன்றம் பரிந்துரை

Must read

மதுரை: அரசு சட்டக் கல்லூரிகளில் அம்பேத்கரின் படத்தை வைப்பது தொடர்பாக தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக  சுற்றறிக்கை அனுப்ப  பரிந்துரை செய்துள்ளது.

தேனியைச் சேர்ந்த சசிகுமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்,தன்னை கல்லூரியிலிருந்து இடைநீக்கம் செய்து தேனி அரசு கல்லூரி முதல்வர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை  நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்,  இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரர் மீது ஒழுங்கு நடவடிக்கையாக இடை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

மனுதாரர் கல்லூரி முதல்வர் அறையில் அம்பேத்கர் உருவப்படத்தை வைக்கவும், பாடங்களை தமிழில் பயிற்றுவிக்கவும் கோரியுள்ளார். இந்த கோரிக்கைகளை முன்வைத்து கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக வன்முறை மனோபாவத்துடனும், தகாத வார்த்தைகளை பேசியும் மோசமாக நடந்து கொண்டுள்ளார். வகுப்புகள் நடைபெறுவதற்கு இடையூறு செய்துள்ளார். இருப்பினும் நீதிபதி அறிவுறுத்தலின் பேரில், கல்லூரி முதல்வரிடம் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கடிதம் வழங்கியுள்ளார். மனுதாரர் ஏற்கனவே இரண்டு வாரங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த தண்டனை போதுமானது என இந்த நீதிமன்றம் கருதுகிறது.

அரசு அலுவலகங்களில்,  தலைவர்களின் உருவப்படத்தை வைப்பது தொடர்பாக ஏற்கனவே எழுந்த பல விவகாரங்களில், ஒன்பது தலைவர்களின் உருவப்படங்கள் பொது அலுவலகங்கள் மற்றும் கட்டடங்களில் வைக்கப்படலாம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசாணையும் உள்ளது. அதனடிப்படையில் தேனி அரசு சட்டக் கல்லூரி முதல்வர் அறையிலும் அம்பேத்கரின் உருவப்படம் வைக்கப்பட்டுவிட்டது. அது நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுவிட்டது.

அம்பேத்கர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கட்டமைப்பாளர். சமூக நீதியின் அடையாளம். அவரது பங்கு ஈடு செய்ய இயலாது. ஒவ்வொரு சட்டக்கல்லூரி மாணவருக்கும் அவர் மிகச்சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறார். சென்னை சட்டக் கல்வியின் இயக்குனர் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு கல்லூரிகளிலும் டாக்டர் அம்பேத்கரின் உருவப்படத்தை வைப்பது தொடர்பாக சுற்றறிக்கையை அனுப்ப இந்த நீதிமன்றம் பரிந்துரை செய்கின்றது என்றார்.

More articles

Latest article