சென்னை: செப்டம்பர் 12ம் தேதி தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரம் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளதாகவும், அன்றைய தினம் 20லட்சம் பேருக்கு தடுப்பூசி போட ஏற்பாடு நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை மடுவாங்கரையில் உள்ள மாநகராட்சி பள்ளியில், வருவாய்த் துறை சார்பில் மனுக்கள் பெறும் முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், கேரளாவில் நிபா வைரசினால் 12 வயது சிறுவன் உயிரிழந்துள்ள தாக தகவல்கள் கிடைத்துள்ளது. இதனால்,  தமிழக எல்லையோரம் உள்ள 9 மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர்களுக்கு கூடுதலாக சோதனை நடத்த அறிவுறுத்தப் பட்டுள்ளது. அதைப் போன்று நிபா வைரஸ் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு காய்ச்சல் முகாம் நடத்த வேண்டும் என்று உத்தரவிடப் பட்டுள்ளது. தமிழகத்திற்கு வரும் வெளிமாநிலத்தவர்கள் 2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டது மற்றும் கொரோனா பரிசோதனை சான்றிதழ்கள் கட்டாயம் காட்ட வேண்டும். சென்னை சர்வதேச விமான நிலையத்தில், தெர்மல் ஸ்கேனுடன் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யும் வசதியும் உள்ளது. இதன் வாயிலாக வெளிநாடுகளில் இருந்து வரும் பயணியர், 13 நிமிடத்தில் பரிசோதனை முடிவை அறியலாம்.

தமிழகத்தில் இதுவரை 3.50 கோடி பேருக்கு மேல் தடுப்பூசி போடப் பட்டுள்ளது.  தற்போது 33 லட்சம் வரை தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. தமிழகம் முழுவதும்  ஒரேநாளில் 10 ஆயிரம் முகாம்கள் நடத்தி 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வரும்  12ஆம் தேதி தடுப்பூசி முகாம்கள் நடத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

கொரோனா  2ஆம் அலையில்  குழந்தை மீதான பாதிப்பு  பெரிய அளவில் இல்லை. இருப்பினும் 3வது அலையில் பாதிப்பு இருக்கும் என எச்சரிக்கப்பட்டு வருகிறது. அதனால், அதில் அரசு  கவனம் செலுத்தி வருகிறது.

பள்ளிகளில் கொரோனா தொற்று பரவலை தடுக்க தீவிரமானநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட பள்ளிகளில் உடனேயே கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.