திருவள்ளூர்:
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் நேற்று நள்ளிரவில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 10 பேர் உயிரிழந்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று இரண்டாம் அலை அதிவேகமாகப் பரவி வருகிறது. இதனால் நாள்தோறும் நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மட்டும் 1551 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

அதேபோல், ஒரே நாளில் 22 பேர் உயிரிழந்தனர். இதில் 1752 பேர் சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பினர்.இந்த நிலையில் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று மாலையிலிருந்து இன்று காலை வரையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 10 பேர் வரையில் உயிரிழந்தனர்.

இதில், இரவு 9 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் 4 பேர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலனின்றி உயிரிழந்தனர். இதையடுத்து இன்று அதிகாலையில் 3.30 மணிக்கு ஆக்ஸிஜன் கொண்டு வந்து பொருத்தப்பட்டு சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டது.