சென்னை
இதுவரை பொங்கல் பண்டிகை கொண்டாடத் தமிழக அரசின் 4529 சிறப்புப் பேருந்துகளில் 1.89 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
தமிழக அரசின் போக்குவரத்துத் துறை சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காகவும், விடுமுறைக்குப் பிறகு ஊர் திரும்புவதற்காகவும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தவிர வழக்கமான பேருந்துகளும் உடன் இயக்கப்படுகின்றன.
சென்னையில் இருந்து பொங்கல் பண்டிகையையொட்டி இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன், 4000 சிறப்புப் பேருந்துகள் என ஜனவரி 11 முதல் ஜனவரி 13 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கும் சேர்த்து 10,300 பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்துத்துறை அறிவித்திருந்தது.
இந்த பேருந்துகள் கோயம்பேடு, பூந்தமல்லி, மாதவரம், கே.கே.நகர், தாம்பரம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இன்று போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, இதுவரை 4,529 சிறப்புப் பேருந்துகளில் 1.89 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் நிலவும் கொரோனா பரவல் அச்சம், இரவு ஊரடங்கு, போன்ற பல்வேறு காரணங்களால் இந்த ஆண்டு சிறப்புப் பேருந்துகளில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.