சென்னை

மாநில அரசு நிதியில் முழுவதும் இயங்கும் மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டை ரத்து செய்ய தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

மருத்துவ கல்லூரிகளில் நீட் தேர்வு மூலம் மட்டுமே மாணவர் சேர்க்கை நடப்பதற்குத் தமிழக அரசு விலக்கு கோரி வருகிறது.  தவிர தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக பட்ட மேற்படிப்பு இடங்களில் 50% மற்றும் பட்டப்படிப்புக்களில் 15% இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.   இதனால் தமிழக மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியாத நிலை உள்ளது.

மத்திய சுகாதார அமைச்சர்  மன்சுக் மாண்டவியாவுக்கு இன்று ஒரு குறிப்பாணை (MEMORANDUM) ஒன்றைத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அனுப்பி உள்ளார்.  அதில் முதல்வர் மு க ஸ்டாலின் நீட் தேர்வில் இருந்து விலக்கு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்தல், கோவையில் மற்றும் ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்தல் உள்ளிட்டவை குறித்து கோரிக்கை விடுத்துள்ளார்.

அதில், “தமிழகத்தில் சுகாதாரத்துறையில் அதிக அளவில் முதலீடுகள் செய்யப்படுகின்றன.   மாநில அரசு நிதியி மூலம் 25 மருத்துவக் கல்லூரிகள் நடைபெறுகின்றன.   தற்போது மட்டுமே மாநிலங்களை மையப்படுத்தி ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படுகின்றன   இதற்கும் மாநிலங்கள் செலவில் பெரும் பகுதியை அளிக்கின்றன.

மாநில அரசு ஏராளமான நிதி ஒதுக்கீடு அளித்த போதிலும் மருத்துவப் படிப்புக்களில் பட்ட மேற்படிப்பு இடங்கள் 60% மற்றும் பட்டப்படிப்புக்களில் 15% இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு அளிக்கப்படுகின்றன.   உச்சநீதிமன்ற  திட்டத்தின் படி அளிக்கப்படும் இந்த இடங்களால் மாநில மாணவர்களுக்குப் பல சிறப்புப் பிரிவுகளில் பயில இயலாமல் போகின்றது.  மாநில மாணவர்களின் கல்விக்காக முதலீடு செய்யப்படும் நிதி அவர்களுக்கு உதவாத நிலை உள்ளது.

அதே வேளையில் மருத்துவக் கல்லூரிகளுக்கு நிதி ஒதுக்காத மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இந்த இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.   எனவே இந்திய அரசு இந்த அகில இந்திய ஒதுக்கீடு குறித்து ஆய்வு நடத்தி முழுவதும் மாநில நிதியின் மூலம் நடைபெறும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.