சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா உயிரிழப்பின்றி, 26 பேருக்கு கொரானா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதுடன், 37 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்து வருகிறது. ஆனால்  ஜூன் மாதத்தில் கொரோனா 4வது அலை பரவும் வாய்ப்பு இருப்பதாக சில மருத்துவ நிபுணர்கள் கூறி வரும் நிலையில், தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ள மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருந்தாலும் மக்கள் முக்கவசம் அணிவது நல்லது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தமிழக சுகாதாரத்துறை இன்று இரவு 7.30 மணி அளவில் வெளியிட்டுள்ள தகவலின்படி,கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 26 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இதுவரை தமிழகத்தில்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 53 ஆயிரத்து  11 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 38,025ஆக உயர்ந்துள்ளது.

இன்று 37 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தற்போது மாநிலம்  முழுவதும் 247 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று 21,623 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன. இதுவரை 6 கோடியே 45 லட்சத்து 80ஆயிரத்து 661 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.