karunanidhi-vaiko
திமுக தலைவர் கருணாநிதி்யை சாதி ரீதியாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசினார். பின்னர் எதிர்ப்பு எழுந்ததும் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தே.மு.தி.க. பிளவுபட்டது தொடர்பான சர்ச்சை குறித்து கருத்து தெரிவிப்பதற்காக சென்னையில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், திமுக தலைவர் கருணாநிதி குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்த கருத்துக்கள் பெரும் அதிர்ச்சி அளிக்கின்றன. 50 ஆண்டு பொதுவாழ்க்கைக்கு சொந்தக்காரரான வைகோவிடமிருந்து இத்தகைய வார்த்தைகளை நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை.
அரசியலில் எந்த தலைவரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. ஆனால், ஒரு தலைவர் மீது விமர்சனங்களை முன்வைக்கும் போது அவை நாகரீகமாகவும், சம்பந்தப்பட்ட தலைவரே தாம் செய்த தவறை ஒப்புக்கொள்ளும் சூழலை உருவாக்குவதாகவும் இருக்க வேண்டும். கருணாநிதி மற்றும் திமுக மீது வைகோ முன்வைத்த குற்றச்சாற்றைக் கூட நாகரிகமான வார்த்தைகளில் வெளிப்படுத்தி இருக்கலாம். ஆனால், காழ்ப்புணர்ச்சியின் மிகுதியில் வைகோ உதிர்த்த கண்ணியமற்ற வார்த்தைகள் நாகரிக சமுதாயத்தில் எவராலும் ஏற்றுகொள்ள முடியாதவை. இதற்காக அவர் கருணாநிதியிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறார். எனினும், வார்த்தைகள் ஏற்படுத்திய மனக்காயத்தை மன்னிப்பு நிச்சயமாக குணப்படுத்தாது. ‘யாகவராயினும் நாகாக்க’ என்ற வள்ளுவரின் வார்த்தைக்கு பல சொற்பொழிவுகளில் வைகோ சிறப்பான விளக்கமளித்திருக்கிறார். அவ்விளக்கத்திற்கேற்ப அவர் நடந்து கொள்ள வேண்டும்.
வைகோவின் வார்த்தைகள் கருணாநிதியை மனதளவில் காயப்படுத்தியிருக்கும் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. ‘‘தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு’’ என்ற குறளுக்கு கருணாநிதி மட்டும் விலக்காக இருக்க முடியாது. எனினும், 80 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் எத்தனையோ நச்சு அம்புகளின் தாக்குதலுக்கு ஆளாகி காயம்பட்ட தி.மு.க. தலைவர் கருணாநிதி, அவற்றைப் போலவே இதையும் பொருட்படுத்தாமல் பொது வாழ்க்கையை தொடருவார் என நம்புகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்