Viduthalai1
விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் நாளை அறிவிப்பு: திருமாவளவன் பேட்டி
சென்னை:
தமிழக சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க.–மக்கள் நலக்கூட்டணி–த.மா.கா ஆகியவை ஓர் அணியாக போட்டியிடுகின்றன. தே.மு.தி.க.வுக்கு 104 தொகுதிகளும், ம.தி.மு.க.வுக்கு 29 தொகுதிகளும், த.மாகா.வுக்கு 26 தொகுதியும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு மற்றும் விடுதலை சிறுத்தை கட்சிக்கு தலா 25 தொகுதியும் ஒதுக்கப்பட்டு உள்ளன.
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 25 தொகுதிகளில் 17 இடங்கள் தனித்தொகுதி ஆகும். சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி களம் இறங்குகிறது. கடந்த சில நாட்களாக 25 தொகுதிகளுக்கும் போட்டியிட விரும்புவர்களிடம் விருப்ப மனு பெறப்பட்டது. இதைத்தொடர்ந்து அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று முதல் நேர்காணல் நடந்து வருகிறது.
கட்சித் தலைவர் திருமாவளவன், பொதுச் செயலாளர்கள் சிந்தனை செல்வன், ரவிக்குமார், பொருளாளர் முகமது யூசுப் ஆகியோர் நேர்காணல் நடத்தினர். இன்றும் நேர்காணல் நடக்கிறது.
இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனிடம் கேட்டபோது,
“விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் 25 தொகுதிகளுக்கும் நேர்காணல் நடக்கிறது. கல்வித் தகுதி, வெற்றி வாய்ப்பு, செல்வாக்கு குறித்து கேட்டறிந்து வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். நாளை வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும்” என்றார்.