vijay subra

சென்னை:

முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகாவுடன் சென்னையில் உள்ள தேமுதிக அலுவலகத்துக்கு வந்த சுப்பிரமணிய சுவாமி, அங்கு விஜயகாந்தை சந்தித்து சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக கலந்துரையாடினார்.

இதுக்குறித்து சுப்ரமணிய சுவாமி செய்தியாளர்களிடம் பேசியப சு.சாமி, “திமுக மற்றும் அதிமுக ஆட்சியில் மக்கள் அதிருப்தி அடைந்துள்ள நிலையில் மூன்றாவது சக்தி தேவைப்படுகிறது” என்றார். ஏதோ கூட்டணி குறித்து விஜயகாந்திடம் தாம் விவாதித்தாக (வழக்கம் போல்) பில்ட் அப் காட்டினார். ஆர்வமிகுதியான் பத்திரிகையாளர் ஒருவர், “கூட்டணிக் குறித்த சந்திப்பா” என்று கேட்க, “கூட்டணிக்கு இன்னும் கால நேரம் உள்ளது” என்று (வழக்கம்போல) கெத்-ஆக பதில் சொல்லிவிட்டு கிளம்பினார் சு.சாமி.

உடனே சிலர், “மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள் , ம.ம.க. ஆகிய கட்சிகள் அமைத்துள்ள கூட்டணியில் காங்கிரஸும், தே.மு.திகவும் இணைய பேச்சுவார்த்தை நடக்கிறது. இதிலிருந்து தேமுதிகவை பிய்த்தெடுத்து தங்களுடன் தங்களுடன் தக்கவைத்துக்கொள்ள பாஜக விரும்புகிறது. ஆகவேதான் விஜயகாந்த் – சு.சாமி. சந்திப்பு நடந்தது” என்று இந்த சந்திப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து பேச ஆரம்பித்தார்கள்.

ஆனால் உண்மை நிலை வேறு.

மிகச் சமீபத்தில் பாஜவுக்கு வந்த சுப்ரமணிய சுவாமியை, பாஜக தலைவர்கள் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. அவர் தெரிவித்த பல கருத்துக்களை, தமிழக பாஜக தலைவர்களே, “அதெல்லாம் சு.சாமியின் சொந்த கருத்து” என்று சர்வசாதாரணமாக சொல்லி கடந்துவிடுவதுதான் வழக்கமாக இருக்கிறது..

2014 செப்டம்பர் 1ம் தேதி “இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும், இந்திய மீனவர்களின் படகுகளை கைப்பற்றிக் கொண்டு, மீனவர்களை மட்டும் விடுவிக்குமாறு இலங்கை அரசுக்கு நான்தான் ஆலோசனை வழங்கினேன்” என்றார் சு.சாமி.

ஆனால், “அது அவரது சொந்தக்கருத்து. பாஜகவின் கருத்தல்ல” என்று உடனடியாக மறுத்தார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்

இது ஒரு உதாரணம்தான். இப்படி பல முறை மாநில பாஜக, சு.சாமி கருத்தை புறந்தள்ளியிருக்கிறது.

பாஜகவின் தேசிய தலைவர்களும் சு.சாமியை மதிப்பதில்லை என்பதற்கும் ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம்.

2013ம் ஆண்டு  மார்ச் மாதம். அஸ்ஸாம் தலைநகர் குவஹாத்தியில் பேசிய சுப்பிரமணிய சுவாமி, “மசூதி என்பது வழிபாட்டு தலமல்ல, ஒரு கட்டடம் மட்டுமே “ என்றார். உடனே ”சுப்பிரமணிய சுவாமி பேசியது அவரின் சொந்த கருத்து. பாரதிய ஜனதாவிற்கு இதில் சம்பந்தம் இல்லை” என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் பிரகாண் ஜவ்டேகர் மூலமாவே தெரிவிக்க வைத்தது பாஜக தலைமை.

அவ்வளவு ஏன்… தான் நினைத்தபடி தமிழகத்தில் கூட்டணியையேோ, தனக்கான ஒரு சீட்டையோ கூட சு.சாமியால் வாங்க முடியவில்லை. அதையும் பார்ப்போம்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலுக்கு பாஜக தமிழகத்தில் அமைத்த கூட்டணியில் சு.சாமிக்கு எந்த பங்கும் கிடையாது. அந்த தேர்தலுக்கு முன்பாக – 2013ம் ஆண்டு – தனியார் கல்லூரி விழா ஒன்றில் பங்கேற்க சு.சாமி கோவைக்கு வந்தார்.

அந்த காலகட்டத்தில்தான், பாஜக கூட்டணியில் தங்கள் கட்சி இணையும் என்று ம.தி.மு.க. தலைவர் வைகோ அறிவித்திருந்தார். இதுபற்றி பேசிய சு.சாமி, “ அது வைகோவின் சொந்த கருத்து!. மதிமுகவுடன் பாஜக கூட்டணி வைக்காது” என்றார். அது மட்டுமல்ல, “இந்த லோக்சபா தேர்தலில் மதுரையில் போட்டியிடுவேன்” என்றார்.

ஆனால் இரண்டுமே நடக்கவில்லை. அந்த தேர்தலில் பாஜக – மதிமுக கூட்டணி ஏற்பட்டது. அதுமட்டுமல்ல… எந்தத் தொகுதியிலும் போட்டியிட சு.சாமிக்கு இடம் ஒதுக்கவில்லை, பாஜக!

பின்நாட்களில்,கூட்டணயிலிருந்து மதிமுக விலகியபோது, “பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுதலை புலிகளின் ஆதரவாளர், அவரும் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலக வேண்டும்’ என்று டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் சு.சாமியின் சொந்தக்கருத்து என்று மறுத்தார் தமிழிசை. அது மட்டுமல்ல.. பாஜகவை கூட்டணியில் இருந்தாலும், தன்னிச்சையாக முதல்வர் வேட்பாளரை அறிவித்திருக்கும் பாமக இன்னமும் பாஜக கூட்டணியில் இருக்கவே செய்கிறது..

இதுதான் சு.சாமியின் உண்மையான செல்வாக்கு.

அது மட்டுமல்ல.. யாரும் தங்களது கருத்தை விஜயகாந்தின் மீது திணிக்க முடியாது. கடந்த தேர்தலின் போதே இந்த அனுபத்தை பெற்றது பாஜக.

தேர்தல் தேதி நெருங்கிய நிலையில், பதட்டத்துடன் கூட்டணி கட்சிகளுடன் சீட் ஒதுக்கீடு பற்றி பேசிக்கொண்டிருந்தது பாஜக. ஆனால் விஜயகாந்தோ ஒரு பக்கம் பஜாகவுடனும், இன்னொரு பக்கம் காங்கிரஸுடனும் பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டிருந்தார். அதோடு, “இன்றைக்கு கூட்டணி பற்றி அறிவிக்கிறேன்.. அன்றைக்கு அறிவிக்கிறேன்” என்று போக்கு காட்டினார்.

மாநாடு கூட்டி அறிவிப்பதாக சொன்னவர், தொண்டர்களிடம், “யாருடன் கூட்டணி வைப்பது” என்று கேட்டு மறுபடி “மக்களுடன் கூட்டணி” என்று (கிண்டலாக) அறிவிப்பும் செய்தார்.

அவரை தங்கள் கூட்டணியில் சேர்க்க தலையால் தண்ணீர் குடித்த பாஜக தலைவர்கள், அது நடந்ததும் திருப்பதிக்குபபோய் மொட்டையடித்து நேர்த்திகடனை நிறைவேற்றியது வரலாறு.

ஆகவே, சுப்ரமணிய சுவாமி, விஜயகாந்த்தை சந்திப்பதால்,       எந்த ஒரு அரசியல் மாற்றமும் வந்துவிடாது.

அல்லது இப்படியும் சொல்லலாம்:  அரசியல் மாற்றத்துக்கான முக்கியமான சந்திப்பாக இருந்தால், பாஜக, சு.சாமியை அனுப்பியிருக்காது.

பிறகு எதற்காகாக இந்த சந்திப்பு?

“எங்கள் இருவர் மீதும் தொடுக்கப்பட்டிருக்கும் அவதூறு வழக்குகளை பற்றி விவாதித்தோம்” என்று சந்திப்புக்குப் பிறகு சு.சாமி சொன்னது கூட உண்மையாக இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால், அவதூறு வழக்கு பற்றி என்றால் “என் வழக்கறிஞரிடம் பேசிக்கொள்ளுங்கள்” என்பவர்தான் விஜயகாந்த்.

தன்னைப் பற்றி ஊடகங்களில் பரபரப்பாக செய்தி அடிபட இந்த செய்தி உதவும் என்று சு.சாமி நினைத்திருக்கலாம். . “சரி.. வர்றாரு.. அரை மணி நேரம் கால்ஷீட் கொடுப்போம்” என்று விஜயகாந்த் நினைத்திருக்கலாம்.

அவ்வளவே.

விரைவில் இது வெளிபப்டயாக எல்லோருக்கும் தெரியவரும். எப்படி என்றால் சு.சாமியால் சும்மா இருக்க முடியாது. விஜயகாந்த்துடனான சந்திப்பு பற்றி ஏதாவது சொல்வார். அப்போது தமிழக பாஜக தலைவர் தமிழிசை, “அது சு.சாமியின் சொந்த சந்திப்பு” என்று சொல்வார்.

அதுதான் நடக்கப்போகிறது.!