ஐதராபாத்

வளைகுடா நாடுகளில் இந்திய தொழிலாளர்கள் தற்கொலை செய்துக் கொள்வது அதிகரித்து வருகிறது.

சமீபகாலமாக வளைகுடா நாடுகளில் இந்திய தொழிலாளர்கள் தற்கொலை செய்துக் கொள்வது அதிகரித்து வருகிறது. கடந்த நான்கு வருடங்களில் ஆறு வளைகுடா நாடுகளில் 28000 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மரணம் அடைந்துள்ளனர். இவ்வாறு மரணம் அடைபவர்களில் ஒரு சிலர் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்துள்ளனர். மீதமுள்ள அனைவரும் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர்.

இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டவர்களில் பெரும்பாலானோர் தெலுங்கானா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். தெலுங்கானாவில் விவசாயிகள் பலர் நீர் பற்றாக்குறையினால் ஆழ்துளைக் குழாய் கிணறுகள் அமைக்கின்றனர். நிலத்தடி நீர் மட்டம் மிகவும் குறைந்துள்ளதால் அந்த கிணறுகளில் நீர் இருப்பதில்லை. அதனால் விவசாயிகள் கடனாளிகள் ஆகின்றனர்.

கடனை அடைக்க அவர்கள் வளைகுடா நாடுகளில் வேலை தேடி செல்கின்றனர். அவ்வாறு நிஜாமாபாத் மாவட்டத்தை சேர்ந்த 24 வயது இளைஞரான கணேஷ் பதாவத் என்னும் விவசாயி பெகரைனுக்கு டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி துப்புரவு வேலைக்காக சென்றுள்ளார். வேலைக்கு சென்று 20 நாட்களே ஆன நிலையில் கடந்த 13 ஆம் தேதி அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

இது சமீபத்தில் நடந்த தற்கொலை ஆகும். ஆனால் வளைகுடா நாடுகளில் மரணமடைந்த தொழிலாளர்களில் ஐந்து மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகம் உள்ளனர். அதில் தெலுங்கானா மாநிலத்தவர் அதிகம் மரணம் அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.