acharya
சொத்துக்குவிப்பு வழக்கில் முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரை கர்நாடக ஐகோர்ட்டு விடுதலை செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ் மற்றும் அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்று வருகிறது.
இறுதி விசாரணை பிப்ரவரி 23-ந் தேதியன்று தொடங்கியது. கர்நாடக அரசு தரப்பில் மூத்த வக்கீல் துஷ்யந்த் தவே தனது வாதத்தை கடந்த வெள்ளிக்கிழமையன்று நிறைவு செய்தார். இதையடுத்து லெக்ஸ் பிராபர்ட்டீஸ் உள்ளிட்ட 6 நிறுவனங்களுக்கு எதிரான மனுவின் மீது கர்நாடக அரசு தரப்பு வக்கீல் பி.வி.ஆச்சார்யா நேற்று தனது வாதத்தை தொடர்ந்தார்.
இன்றைய வாதத்தின் தொடக்கத்தில், ஜெயலலிதா மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் வாங்கி குவித்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிய ஜெயலலிதா 66 கோடிக்கு சொத்து சேர்த்தார் என்பது வழக்கு. அதிலும் கூட விசாரணை நீதிமன்றம் (நீதிபதி குன்ஹா) 13 கோடி செலவாக கழித்து 53 கோடி வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்திருப்பதாக தீர்ப்பு வழங்கியிருக்கிறார்.
ஆக தமக்கான வருமானம் எப்படி வந்தது என்பதை நிரூபிக்கும் பொறுப்பு குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதாவுக்குத்தான் இருக்கிறது என்றார் ஆச்சார்யா.
இதையடுத்து இந்த வழக்கின் இறுதி வாதம் மார்ச் 29ம் தேதி நடைபெறும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.