vanniarasu
உடுமலைப்பேட்டையில் பட்டப்பகலில் கலப்பு திருமணம் செய்த தலித் இளைஞர் சங்கர் வெட்டி படுகொலை செய்யப்படார். கொலையாளிகளை அரைநிர்வாணத்தோடு நிற்கவைத்து போட்டோ எடுத்ததும், அந்த போட்டோவை வெளியிட்டதும் மனித உரிமை மீறல் என்று காவல்துறை மீது நீதிபதிகள் பாய்ந்தனர். இதற்கு
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தித்தொடர்பாளர் வன்னி அரசு ஆவேசக்கேள்விகள் எழுப்பியுள்ளார்.
‘’சாதி மறுத்து காதல் மணம் புரிந்த சங்கர் கவுசல்யாவை பட்டப்பகலில் அரிவாளால் வெட்டிச் சாய்த்தது சாதிவெறி கும்பல். காதல் மணம் புரிந்த எட்டு மாதங்கள் முழுக்க கொலை மிரட்டல்கள், லட்சங்களில் பணம் தருகிறோம் என்று அவன் காதலுக்கு விலை சொல்லப்பட்ட போதும், இரண்டு முறை கொலை முயற்சி நடந்தபோதும் எந்த விதத்திலும் தன் காதலை விட்டுத்தராமல், உறுதியோடு நின்று, இந்த முறை நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டான் எங்கள் வீரன் சங்கர்.
எல்லாவற்றையும் விட தான் உயிராய் நேசித்தவனை கண்முன்னே பறிகொடுத்துவிட்டு, மிகவும் ஆபத்தான நிலையில் உயிர்பிழைத்து தன் காதல் கணவனுக்காக நீதி கேட்டு நிற்கும் தங்கை கவுசல்யாவை நினைத்தால் உள்ளம் குமுறுகிறது. நாடெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக கவுசல்யாவின் தந்தை உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தங்கள் சாதி ஆதிக்க வெறிக்காகவே சங்கரை படுகொலை செய்தோம் என்று அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் படுகொலையை நிகழ்த்திய நான்கு பேரை கைது செய்த போலீஸ் அவர்களின் கைகளை பின்னால் கட்டி, ஜட்டியோடு நிற்க வைத்துள்ள படம் ஒன்று நேற்று முன்தினம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.
நேற்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நாகமுத்து மற்றும் ஜெயச்சந்திரன் ஆகியோர் நட்ட நடு ரோட்டில் பட்ட பகலில் தம்பி சங்கரை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொன்றதாக கைது செய்யப்பட்ட நான்கு பேர் உள்ளாடைகளோடு இருக்கும் படம் வெளியானது ‘மனித உரிமை மீறல்’ என்று தாமாகவே வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டனர். இப்படி குற்றவாளிகளை அறை நிர்வாணத்தோடு எப்படி நிறுத்தலாம்? அந்த படத்தை எப்படி வெளியிடலாம் என்று மனித உரிமைகளை உயர்த்திப் பிடித்து காவல்துறைக்கும், ஊடகத்திற்கும் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த வழக்கையும், அதை தாமாக எடுத்துக் கொண்ட நீதிபதிகளையும் இப்படி அப்பாவியாக புரிந்துக்கொள்ளத்தான் நமக்கும் விருப்பம். ஆனால் உண்மை வேறுவிதமாக இருக்கிறது.
இதே தமிழகத்தில் பல காலமாக வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட தலித் மற்றும் பழங்குடியின பெண்கள், குழந்தைகளின் படங்கள் சட்ட வழிகாட்டுதலுக்கு விரோதமாக போலீஸ் உதவியுடன் ஊடகங்கள் வெளியிடுகின்றன. கைவிலங்கு போடக்கூடாது என்னும் விதி மீறப்படுகிறது. தினந்தினம் காவல் நிலையங்களில் அப்பாவிகள், ஏழைகள், விளிம்பு நிலைச் சமூகங்களை சேர்ந்த இளைஞர்கள் விசாரணை என்ற பெயரில் சித்திரவதை செய்யப்பட்டு, படுகொலையும் செய்யப்படுகின்றனர். 5000 சந்தேக மரணங்கள் தமிழ்நாட்டில் நடப்பதாக ஒரு உயர் அதிகாரி சமீபத்தில் தெரிவித்திருந்தார். பத்திரிக்கைகளில் பெண்களை திருட்டுத்தனமாக ஆபாசமாக படம் எடுத்து வெளியிட்டுள்ளனர். தர்மபுரி இளவரசன் வழக்கு சிபிசிஐடி விசாரணையில் திட்டமிட்டு தற்கொலை என முடிக்கப்பட்டது, சேலம் கோகுல்ராஜ் வழக்கில் நாங்கள் நான்கு நாட்கள் தொடர் உண்ணாநிலை போராட்டம் நடத்திய பின்னரே கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது, கோகுல்ராஜ் வழக்கை விசரித்த டிஎஸ்பி விஷ்ணுபிரியா மரணத்திற்கு சிபிஐ விசாரணை கோரி இன்று வரை விஷ்ணுபிரியாவின் தந்தை போராடி வருகிறார், போலீசால் கடுமையாக தாக்கப்பட்டு கை உடைக்கப்பட்ட தம்பி மகேந்திரனின் படம் போலீசால் வெளியிடப்பட்டு இணையம் முழுதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆனால் அவருக்கு பிணை கிடைப்பதிலும் அவ்வளவு போராட்டம், இரண்டு நாட்களுக்கு முன்பு கூட கண்ணகி நகரை சேர்ந்த சிறுவன் முகேஷ் பொய் வழக்கில் போலீசால் கொடூரமாக தாக்கப்பட்டு இன்று ஒரு காதில் கேட்கும் திறனே அவர் இழந்துள்ளார்.
இவ்வளவும் இந்த நாட்டில் தான் நடக்கிறது. இதில் ஒரே ஒரு விசயத்திலாவது இந்த நீதிபதிகள் தாமாக முன்வந்து வழக்கை எடுத்திருந்தால் இன்று மனித உரிமை மீறலை கண்டவுடன் துடிதுடித்த அவர்களின் மனசாட்சியை நாம் பாராட்டியிருக்கலாம், கொண்டாடியிருக்கலாம். ஆனால் இன்று தன் சாதிக்கான மனசாட்சியாக துடுத்தது தானே உண்மை. அதை நாம் விமர்சிக்க வேண்டாமா? பாகுபாடு காட்டும் மனசாட்சியை கண்டிக்க வேண்டாமா? சுட்டி காட்டி திருத்த வேண்டாமா? நீதிபதி நாகமுத்து நடராஜனுக்கு (சசிகலா நடராஜன்) மிகவும் நெருக்கமானவர், அவர் உறவினர் என்றும், இந்த பின்னணியில் பல குற்றச்சாட்டுகள் நீதித்துறை வட்டாரத்தில் இவர் மீது வைக்கப்படுகிறது. இவ்வாறு அவரின் சாதி மனசாட்சி துடிப்பது புதிதான விசயம் இல்லையென்றும் சொல்லப்படுகிறது. கொலை குற்றத்திற்காக கைது செய்யப்பட்டவர்களின் அரை நிர்வாண கோலத்திற்கு துடிப்பவர்கள், அவர்களால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட சங்கருக்காகவும், உயிருக்கு போராடும் கவுசல்யாவுக்கும் துடிக்காதது ஏன்?
தமிழகத்தின் சாதிய ஆணவக் கொலைகளின் தந்தை ராமதாசிடம் சங்கர் படுகொலை குறித்து கேட்ட போது ‘இதை விட முக்கியமான விசயங்கள் பேசியிருக்கிறேன்’ என்று சிரித்துக் கொண்டே கடந்து சென்ற குரூரமான மனநிலை தான் இந்த நீதிபதிகளின் ‘தேர்ந்தெடுக்கப்பட்ட’ கோபத்திலும் வெளிப்படுகிறது. அன்று அநியாயமாக அப்சல் குருவை தூக்கில் போடுவதற்கு ‘கூட்டு மனசாட்சி’ என்ற அடிப்படையில் செயல்பட்டார் ஒரு நீதிபதி. இன்று நியாயமாக இவர்கள் எழுப்பும் கேள்விகள் கூட ‘சாதி மனசாட்சி’ என்ற அடிப்படையில் செயல்படுவதைத்தான் நாம் பார்க்கிறோம்.’’